பாடல் #1755: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)
சத்தி சிவமா மிலிங்கமே தாபரஞ்
சத்தி சிவமா மிலிங்கமே சங்கமஞ்
சத்தி சிவமா மிலிங்கஞ் சதாசிவஞ்
சத்தி சிவமா குந்தற்பரந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சததி சிவமா மிலிஙகமெ தாபரஞ
சததி சிவமா மிலிஙகமெ சஙகமஞ
சததி சிவமா மிலிஙகஞ சதாசிவஞ
சததி சிவமா குநதறபரந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சத்தி சிவம் ஆம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவம் ஆம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவம் ஆம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவம் ஆகும் தற்பரம் தானே.
பதப்பொருள்:
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆம் (சேர்ந்து இருக்கின்ற) இலிங்கமே (ஆத்ம இலிங்கமே) தாபரம் (உடலாக இருக்கின்றது)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆம் (சேர்ந்து இருக்கின்ற) இலிங்கமே (ஆத்ம இலிங்கமே) சங்கமம் (உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றது)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆம் (சேர்ந்து இருக்கின்ற) இலிங்கம் (ஆத்ம இலிங்கமே) சதாசிவம் (அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆகும் (ஆக சேர்ந்து) தற்பரம் (தாமாகவே இருக்கின்ற பரம்பொருள்) தானே (ஆகும்).
விளக்கம்:
பாடல் #1754 இல் உள்ளபடி எப்போதும் பிரியாமல் இருக்கின்ற இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கமே உடலாக இருக்கின்றது. இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தில் உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றது. இப்படி மூன்றும் கலந்து பிண்டத்தில் இருக்கின்ற ஆத்ம இலிங்கமே அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது. இப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கின்ற ஆத்ம இலிங்கமானது தானாகவே அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்றது.