பாடல் #148

பாடல் #148: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

விளக்கம்:

புதியதாகத் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு அறுசுவையோடு உணவு சமைத்து வைத்தார்கள். மாப்பிள்ளையும் அனைத்து உணவையும் நன்றாக சுவைத்து உண்டான். கொடிபோன்ற இடை கொண்ட இளம் மனைவியுடன் சுகமாக குலாவினான். இடது பக்கம் சிறிது வலிக்கின்றது என்றான். மனைவி அவனைத் தன் மடியில் கிடத்திப் படுக்க வைத்து என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே இதய வலியால் உயிர் பிரிந்து இறந்து போனான். உயிர் எந்த அளவு நிலைப்புத் தன்மை இல்லாதது என்பதை விளக்கும் ஒரு நிகழ்வு இது. இதை உணர்ந்து என்றும் நிலைத்திருக்கும் இறைவனையே போற்றுவோம்.

பாடல் #149

பாடல் #149: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மன்றத்தே நம்பி தன்மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

விளக்கம்:

ஊரில் ஆடவன் ஒருவன் தன் முயற்சியினால் பெரும் பொருள் சேர்த்து பலரும் வியக்கும் வண்ணம் பல அடுக்கு மாளிகையைக் கட்டினான். பின் ஊர் அறிய ஒரு பல்லக்கு செய்து அதில் ஏறி ஊரில் உள்ளோர்க்கு தானங்கள் பல வழங்கினான். அவனது உடலை விட்டு உயிர் பிரிந்த பின் பலர் நின்று தலைவனே என்று கூப்பிட்டுக் கதறியும் அவன் உயிர் திரும்பாமலே போய்விட்டான்.

கருத்து : ராஜபோகத்தில் வாழ்ந்தாலும் தான தர்மங்கள் எவ்வளவு செய்தாலும் உயிர் உடலில் நிற்காது.

பாடல் #150

பாடல் #150: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

விளக்கம் :

இனிய உறுதி மொழிகளை கூறி ஆணும் பெண்ணும் இருமனங்களும் ஒன்று சேர திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கூடிக்கலந்து மகிழ்ந்திருந்த மணமக்கள் காலப்போக்கில் ஆரம்பத்தில் இருந்த காதல் பாச நினைவுகளை மறந்து ஒருவர் மேல் ஒருவர் திகட்டி சலிப்படைந்து விடுவர். பின் ஒரு நாள் இருவரில் ஒருவர் இறந்து விட அந்த உடலை பாடையின் மேல் வைத்து ஒப்பாரி வைத்து அழுது புலம்பி தங்களின் அன்பு பாசத்தையும் உடலுடன் சேர்த்து தீ வைத்து பலியிட்டார்களே.

கருத்து : மணந்தவர்களின் அன்பும் சுடுகாடு வரை மட்டுமே இருக்கும்.

பாடல் #151

பாடல் #151: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

விளக்கம் :

மை பூசிய கண்களுடைய மனைவியும் தேடிய செல்வமும் அருகில் இருக்க மருத்துவர் கையில் நாடி பார்த்து இனி மருத்துவம் பயனளிக்காது என்று கைவிட்டு விட கொடுத்தது வாங்கியது செய்யவேண்டியது அனைத்தையும் மற்றவர்களிடம் சொல்ல எண்ணியும் நினைவுகள் இல்லாமல் தடுமாறி உடலில் ஒட்டிய உயிர் மூச்சு ஒடுங்கிவிடும். வாசம் மிகுந்த நெய்யால் செய்த உணவுகளை உண்டு மகிழ்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் செயலிலந்து உடலை விட்டு உயிர் பிரிந்து விடும்.

பாடல் #152

பாடல் #152: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

விளக்கம் :

மரண வேதனையில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி காலத்தில் ஒரு நாள் மரணம் வந்துவிடும். அப்போது உயிராகிய பொக்கிஷத்தின் மேல் போர்வை போல் இருந்த உடம்பாகிய பந்தல் பிரிந்துவிட உடலோடு இருந்து இதுவரை வழிநடத்திவந்த உயிரும் வெளியேறிவிடும். அவ்வாறு உயிர் வெளியேறியபின் காற்றில்லாத உடலில் ஒன்பது வகை துவாரங்களும் (2 கண், 2 காது, 2 மூக்குத்துவாரங்கள், வாய், பால்குறி, ஆசனவாய்) அடைபட்டுவிடும். அவ்வாறு உயிர்காற்று வெளியேறியபின் அந்த உடலின்மேல் அன்பு கொண்டிருந்தவர்கள் எல்லோரும் வந்து அழுது ஒப்பாரி வைத்துவிட்டு பின்பு சென்றுவிடுவார்கள்.

பாடல் #153

பாடல் #153: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டைவிட்டு நம்பி நடக்கின்ற வாறே.

விளக்கம்:

தன் நாட்டிற்கு அரசனாகவும் குடிமக்களில் முதல்வனாகவும் இருப்பவன் பலவித பல்லக்கில் ஏறித் திரிந்தவன் கடைசியில் சுடுகாட்டிற்குச் செல்லும் பாடையில் உயிர் பிரிந்து கிடக்க அவனது நாட்டின் குடிமக்கள் அவனுக்குப் பின்னால் வர அவனுக்கு முன்னால் பறை அடிப்பவர்கள் மத்தளம் கொட்ட இதுவரை அவன் ஆட்சி செய்த நாட்டைவிட்டு சுடுகாட்டுக்கு அவன் செல்லும் முறை இதுவே ஆகும்.

உட்கருத்து: நாட்டின் தலைவன் என்றாலும் கடைசியில் ஒரு நாள் சுடுகாட்டுக்குப் போய்தான் ஆகவேண்டும். போகும்போது மக்கள் பின்வந்தாலும் அவர்கள் உடன் வர மாட்டார்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள்.

பாடல் #154

பாடல் #154: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

விளக்கம்:

மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழுகின்றன. இந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் செய்யப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள் ஆன்மாவாகிய உயிர் வாழுகின்றது. எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து கெட்டு உயிர் போகிறதோ அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடி விடுகின்றன.

96 தத்துவங்கள் – 25 பஞ்சபூத காரியங்கள், 5 வாசனாதிகள்/அவத்தைகள், 10 வாயுக்கள், 10 நாடிக்கள், 4 வாக்குகள், 3 மலங்கள், 3 குணங்கள்) 5 சிவ தத்துவம், 7 வித்யா தத்துவம், 24 ஆன்ம தத்துவம்.

பாடல் #155

பாடல் #155: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேறிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர் வாங்கியே வைத்தகன் றார்களே.

விளக்கம்:

தேன் நிறைந்த வாசனை மிக்க மலர்களைத் தன் கூந்தலில் சூடியிருக்கும் மனையாளும் சம்பாதித்த செல்வங்களும் சொத்துக்களும் ஒருவன் இருந்த ஊரிலேயே தங்கிவிட அவன் மட்டுமே பாடையில் ஏற்றப்பட்டு ஊருக்குப் பொதுவாக வெளியில் இருக்கும் சுடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அவனது குழந்தைகளும் சுற்றத்தாரும் அன்பு கலந்த சோகத்தோடு அவனது உடலைப் பாடையிலிருந்து வாங்கி சுடுகாட்டில் வைத்து சுட்டெரித்துவிட்டு அல்லது புதைத்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுவிடுவார்கள்.

கருத்து : தேடிய சொத்துக்கள் மனைவி மக்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்க தேடியவன் மட்டும் காட்டில் எரிக்கப்படுவான் என்பதை இப்பாடலில் உணரலாம்.

பாடல் #156

பாடல் #156: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்
எச்சக லாதுநின் றிளைக்கின்ற வாறே.

விளக்கம்:

பாடல் #155 இல் கூறியபடி தேடிய சொத்துக்கள் மனைவி மக்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்க தேடியவன் மட்டும் காட்டில் எரிக்கப்படுவான் என்று கண்கூடாக கண்ட மனிதர்கள் கூட தங்களின் உடலைவிட்டு உயிர் என்றும் பிரியாது இருக்கும் என்று நினைத்துக் கொண்டு பெரும் பாடுபட்டு பலவித செல்வங்கள் சேர்ப்பதும் சேர்த்த செல்வங்களின் மேலே அதிகமான ஆசை வைப்பதும் அவரைத் பின்பற்றி மற்றவர்களும் அவ்வாறே செய்வதும் இதனால் அவர்கள் பிறவியோடு வந்த கர்ம நிலைகள் மாறாமலேயே அவர்களும் உடல் இளைத்து வயதாகி ஒரு நாள் அவர்கள் முதலில் கண்டவனைப் போலவே உயிர்பிரிந்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதையும் பார்த்தால் இவர்களின் எண்ணத்தை என்னவென்று சொல்வது?

பாடல் #157

பாடல் #157: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலைப் போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலையில் மூழ்குவர் நீதியில் லாரே.

விளக்கம்:

ஒருவன் இறந்தபின் அவனது உடலைச் சுற்றி நின்று கூவி ஒப்பாரி வைக்கும் உறவினர்களும் சுற்றத்தாரும் மனைவியும் மக்களும் அவனது உடலை ஊரின் எல்லை சுடுகாடு வரை எடுத்துச் சென்றபின் தங்களின் நெற்றியின் மேல் அரும்பிவிட்ட வேர்வையை துடைத்து நீக்குவது போல் அவனது உடலையும் இறக்கி வைத்து விறகுகளை அடுக்கி அதற்கு நெருப்பு மூட்டிவிட்டு நீரினில் தலை முழுகி விட்டுச் சென்று விடுபவர்கள். தனக்கு உறுதிணையாய் இருந்த அவனது உடலையும் அவனது அன்பையும் அப்போதே மறந்துவிட்ட நீதியில்லாதவர்கள் இவர்கள்.

கருத்து: ஒருவன் இருக்கும் வரை அவன் மூலம் கிடைத்த அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அவனோடு அன்பாக இருந்தவர்கள் அவன் இறந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டும் தங்களுக்கும் ஒரு நாள் இறப்பு வரும் என்பதை நினைத்துப் பார்க்காதவர்கள் நீதியில்லாதவர்கள்.