பாடல் #723

பாடல் #723: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

ஓசையினில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியினில் மூன்றும் நாவினில் இரண்டும்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசுஅறு சோதி வகுத்துவைத் தானே.

விளக்கம்:

ஏழு விதமான ஒலிகளை உணரும் காதுகளும் ஐந்து விதமான ஒளிகளைக் காணும் கண்களும் மூன்று விதமான சுவாசங்களை முகரும் நாசிகளும் இரண்டு விதமானதைச் செய்யும் நாக்கும் தொடுவதை உணரும் உடலும் உயிரான ஆன்மாவை விட்டுப் பிரியும் நாள் எதுவென்பதை மிகவும் துல்லியமாக மூச்சுக்காற்றை வைத்தே அளந்து வைத்திருக்கின்றான் அனைத்துவித மலங்களையும் அறுத்து அருளும் சோதிமயமான இறைவன்.

கருத்து: உயிர்கள் தம்மிடம் அடையும் வழியை வைத்தருளிய இறைவன் அதன்படி செய்யாத உயிர்கள் அழிந்து மறுபடியும் பிறவி எடுப்பதற்கான ஆயுளையும் துல்லியமாக அளந்து வைத்திருக்கின்றான்.

காதுகள் உணரும் ஏழு விதமான ஒலிகள்:

  1. சத்தம் – இயற்கையான ஓசைகள்
  2. பரிசம் – கருவிகளினால் எழுப்பப்படும் இசை
  3. உருவம் – பிம்பங்களின் அசைவைக் காட்டும் சலசலப்பு
  4. இரசம் – நீர் எழுப்பும் ஓசை
  5. கந்தம் – காற்று எழுப்பும் ஓசை
  6. சரித்தல் – உலகத்தோடு இயங்கும் நுண்ணிய ஓசைகள்
  7. சேர்த்தல் – உடலுக்குள் இயங்கும் நுண்ணிய ஓசைகள்

கண்கள் காணும் ஐந்து விதமான ஒளிகள்:

  1. உருவம் – நிலம் (பிம்பங்கள்)
  2. இரசம் – நீர் (திரவங்கள்)
  3. கந்தம் – காற்று (புகைகள்)
  4. தகித்தல் – நெருப்பு (தீக்கள்)
  5. வெம்மை – ஆகாயம் (வெற்றிடம்)

நாசிகள் முகரும் மூன்று விதமான சுவாசங்கள்:

  1. வாசனை
  2. இடகலை மூச்சு குளிர்ச்சியான காற்று
  3. பிங்கலை மூச்சு வெப்பமான காற்று

நாக்கு செய்யும் இரண்டு விதமான செயல்கள்:

  1. சுவைத்தல்
  2. பேசுதல்

பாடல் #640

பாடல் #640: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.

விளக்கம்:

சிவபெருமானைத் தேடி எட்டுத் திசைகளிலும் பணிந்து அவனே பரம் பொருள் என்று அறிந்ததால் தைரியமுடன் எட்டுத் திசையிலும் சிவத்தை வணங்க அதனால் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் தன் அருளால் எட்டு சித்திகளும் அவருக்குள் நிலைபெறச் செய்வார்.

கருத்து: எதையும் சிவமாய்ப் பணிந்து வணங்குபவர்களுக்கு சிவபெருமான் எட்டுவித சித்திகளும் கொடுத்து அருள்வான்.

பாடல் #641

பாடல் #641: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.

விளக்கம்:

தேவர்கள் முதலான அனைத்து உயிர்களின் தன்மையையும் அறிந்து கொள்கின்ற பண்பாளனாகிய இறைவனின் திருவடியை தூய எண்ணத்துடன் சரண் அடைந்து தூய்மையான பரவெளியைக் (அண்ட சராசரங்கள்) கண்டேன். ஆதலால் இறைவன் தனது பேரருளால் அரிதான எட்டுவித சித்திகளையும் எனக்கு வழங்கி எனது பிறப்பை அறுத்து அருளினான்.

கருத்து: சிவபெருமானின் திருவடியை சரணடைந்தால் எட்டுவித சித்திகளும் பெற்று பிறவி இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #642

பாடல் #642: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

விளக்கம்:

குருவின் அருளினால் அவர் காட்டிய வழியிலேயே மூலாதார அக்கினியை ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு தனக்குள்ளேயே அலையும் எண்ணங்களையும் (கேசரி யோகம்) வெளியே அலையும் எண்ணங்களையும் (சாம்பவி யோகம்) கடினத்துடன் ஒன்றாகச் சேர்த்து ஒருமுகப்படுத்தி வைத்தால் சிவகதிப் பேறான எட்டுவித சித்திகளில் எட்டாவது சித்தியான வசித்துவம் (அனைத்தையும் வசியப்படுத்துதல்) கைவரப் பெறும்.

கருத்து: குரு அருளிய வழியில் மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால் எட்டாவது சித்தியான அனைத்தையும் வசியப்படுத்தும் நிலையை அடையலாம்.

பாடல் #643

பாடல் #643: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

விளக்கம்:

ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களிலும் அறுபத்து நான்கு கலைகள், மூன்று காலங்கள் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) மாயை ஆகிய தத்துவங்களிலும் சேராமல் விலகி ஒன்றுபட்டு இருக்கும் அறிவை ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இருக்கும் தொடர்பை உண்மையென அறிந்து அதிலேயே கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.

கருத்து: நிலையில்லாத உலகை விட்டு நிலையான இறைவனோடு கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.

பாடல் #644

பாடல் #644: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிரு நான்காய் அட்டமா சித்திக்கே.

விளக்கம்:

விருப்பத்தோடு மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் செயல்கள் கர்ம யோகமாகும். அது இருபதாயிரத்து எண்ணூறு பிரிவுகளைக் கொண்டது. கர்ம யோகம் உடம்பினால் செய்யப்படும் அருமையான உழைப்பினால் நிறைவு பெறும். அவ்வாறு நிறைவு பெறுவதால் பெறக்கூடிய சித்திகள் எட்டுவித சித்திகளாகும்.

கருத்து: கர்ம யோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி உடல் உழைப்பால் செய்து முடித்தவர்களுக்கு எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

பாடல் #645

பாடல் #645: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

விளக்கம்:

சந்திர நாடியாகிய இடைகலையில் (இடது நாசி) பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் மூச்சுக்காற்றில் சூரிய நாடியாகிய பிங்கலை (வலது நாசி) வழியாக நாலங்குல அளவு மூச்சுக்காற்று வெளியே போக மீதியுள்ள எட்டங்குல அளவு மூச்சுக்காற்று உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியாக அட்டமா சித்திகளை அடையலாம்.

கருத்து: பன்னிரண்டு ஆண்டுகள் முறைப்படி பிராணாயாமம் செய்து வந்தால் எட்டுவித சித்திகளையும் உறுதியாக அடையலாம்.

பாடல் #646

பாடல் #646: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.

விளக்கம்:

எண்ணிலடங்காத நோய்கள் போன்ற பிறப்புகளில் நம்மைச் சூழ்ந்து பற்றிக் கொண்டிருக்கும் உறவுகளும், நிலைத்திருக்கும் கலை உணர்வுகளும், அந்த உணர்வுகளைத் தரும் கல்விகளும், அந்தக் கல்விகளால் வரும் தெளிவும், அந்தத் தெளிவால் பெறப்படும் நுட்பமான உணர்வுகளும், அந்த உணர்வினால் அடையும் பெருமைகளாலும் எட்டுவித சித்திகளும் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் ஆத்ம குரு கூறிய வழியைக் கேட்டு அதன்படி பொறுமையுடன் நடந்துவந்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

கருத்து: உலகத்தில் கிடைக்கும் எதனாலும் சித்திகள் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் குரு கூறிய வழியைக் கடைபிடித்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.

பாடல் #647

மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

விளக்கம்:

பாடல் #644 #645 #646 இல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் ஏழாவது ஆண்டில் சூறாவளிக் காற்றைவிட வேகமாக செல்லக்கூடிய தன்மையும் உடல் தளராது நெடுந்தூரம் நடந்து செல்லக்கூடிய வலிமையும் கிடைக்கும். எட்டாவது ஆண்டில் வயோதிகத்தால் வரும் நரைமுடியும் உடல் சுருக்கங்களும் மறைந்து இளமை கிடைக்கும். ஒன்பதாவது ஆண்டில் என்றும் அழியாத உடல் கிடைக்கும்.

கருத்து: குரு அருளிய யோக முறையைக் கடைபிடித்தால் 7,8,9 ஆம் ஆண்டுகளில் வேகமும் வலிமையும் இளமையும் அழியாத உடலும் கிடைக்கும்.

பாடல் #648

பாடல் #648: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்
ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.

விளக்கம்:

பாடல் #644 #645 #646 ல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்து வந்தால் பத்தாவது ஆண்டில் தியானத்திலிருக்கும் சிவ நிலையை அடையலாம். பதினோராவது ஆண்டில் எட்டுவித சித்திகளும் கிடைக்கும். பன்னிரண்டாவது ஆண்டில் மேலிருக்கும் ஏழு உலகங்களுக்கும் கீழிருக்கும் ஏழு உலகங்களுக்கும் சென்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து இருக்கும் நிலையை அடையலாம்.

கருத்து: குரு அருளிய யோக முறையைக் கடைபிடித்தால் 10,11,12 ஆம் ஆண்டுகளில் சிவ நிலையும் எட்டுவித சித்திகளையும் எங்கும் பரந்து இருக்கும் நிலையையும் அடையலாம்.