பாடல் #766

பாடல் #766: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை. பாடல் #765 இல் உள்ளபடி இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால் இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். தமக்குள் இறைவன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டவர்களுக்கு இறைவன் பேரறிவாய் நின்று அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான். பேரறிவாய் அமர்ந்திருக்கும் இறைவனையே எப்போதும் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள் தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.

கருத்து: தமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற இறைவனைக் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனாகவும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #767

பாடல் #767: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அவனிவ னாகும் பரிசறி வார்இல்
அவனிவ னாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றி
அவனிவன் வட்டம தாகிநின் றானே.

விளக்கம்:

தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனைப் பற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள். பாடல் #765 இல் உள்ளபடி ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் ஒலியாக இருப்பவன் சிவம். உகாரம் எனும் ஒளியாக இருப்பவள் சக்தி. மகாரம் எனும் குண்டலினியாக இருப்பது உயிர்கள். உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் ஒளியாகவும் எட்டாவது இடமான துவாதசாந்த வெளியில் ஒலியாகவும் இருக்கின்ற இறைவனே பிரணவ மந்திரத்திலுள்ள மூன்று எழுத்துக்களின் தத்துவம் என்பதை உணர்ந்து அந்த இடங்களோடு தமது உயிர்சக்தியைக் கலந்து நிற்கின்றவனே இறைவனாக ஆகிவிடுகின்றான்.

கருத்து: பிரணவ மந்திரத்தின் தத்துவம் ஒலியாகிய சிவமும், ஒளியாகிய சக்தியும், உயிராகிய ஆன்மாக்களும் ஒன்றாகக் கலந்து ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இருப்பதே ஆகும். இதை உணர்ந்து அறிந்து கொண்டவர்கள் இறைவனாக ஆகிவிடுகிறார்கள்.

பாடல் #768

பாடல் #768: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்து இருக்கின்ற ஏழு சக்கரங்களிலும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன் என்பதை அறிந்துகொண்டு அந்த இடங்களோடு தம் உயிர்சக்தியை ஒன்றாகச் சேர்த்து வைத்து இருக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்து கொள்வதில்லை. அப்படி இருக்கும் வழிமுறையை பாடல் #765 ல் உள்ளபடி குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால் கருப்பங்கட்டி போல இனிக்கின்ற அமிர்தமான இறைவனை கண்டுகொள்ளலாம்.

கருத்து: பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் இருக்குமிடத்தை அடையும் வழிமுறையை உயிர்கள் குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் உணர்ந்துவிட்டால் இறைவனை கண்டுவிடலாம்.

பாடல் #769

பாடல் #769: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

விளக்கம்:

பாடல் #768 ல் உள்ளபடி தமக்குள் இறைவனை உணர்ந்து கண்டுகொண்ட யோகியர்கள் அந்த இறைவனே படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற திருமாலாகவும், கருநீலக் கறையுடைய தொண்டையைக் கொண்டு மாயையை அழிக்கின்ற உருத்திரனாகவும், மாயையால் மறைக்கின்ற மகேசுவரனாகவும், அருளுகின்ற சதாசிவனாகவும் உயிர்களின் உடலோடு கலந்து நிற்கின்ற சக்திமயங்களாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

கருத்து: யோகியர்கள் தமக்குள் உணர்ந்த இறைவனே அனைத்து சக்தியாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

பாடல் #724

பாடல் #724: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

விளக்கம்:

உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள்ளிருக்கும் உயிர் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந்தால் ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை இறையருளால் அறிந்து கொண்டு அதன் மூலம் உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்த்தேன்.

கருத்து: இறைவனை அடைவதற்கு கருவியாக பயன்படும் உடலையும் உயிரையும் உறுதியாக நீண்ட காலம் அழியாமல் வளர்த்து இறைவனை அடையலாம்.

பாடல் #725

பாடல் #725: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

விளக்கம்:

உடம்பை முன்பு குறையுடையது என்று எண்ணியிருந்தேன். உடம்புக்குள்ளே உரிமையாளர் இல்லாமல் தானே வந்தடையும் பொருள் ஒன்று இருப்பதை கண்டேன். அந்த பொருள் பரம்பொருளாகிய இறைவன் என்பதையும் அவன் இந்த உடம்புக்குள்ளே கோவில் கொண்டுள்ளான் என்பதை தெரிந்து கொண்டு இந்த உடம்பை யாம் பேணி பாதுகாத்து வருகின்றோம்.

கருத்து: உடம்புக்குள் பரம்மொருளாகிய இறைவன் இருப்பதினால் பிராணாயமம் யோகப்பயிற்சிகள் செய்து உடம்பை பாதுகாத்து வரவேண்டும்.

பாடல் #726

பாடல் #726: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

விளக்கம்:

சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி மூலாதாரத்திலுள்ள அக்கினியால் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து சுழுமுனை நாடியின் கீழ்புறத்திலிருந்து மேலாகச் செலுத்தினால் சுழுமுனையை நாடி சுத்தம் அடையும். பின்பு அந்த காற்றை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு சேர்த்து அந்த மலரை விரியச் செய்த பிறகு அந்த வாயுவை உடம்பிலுள்ள அனைத்து நாடிகளுக்குள்ளும் செலுத்தும் அகயோகப் பயிற்சியை அறிந்து கொண்டு அதைச் செய்பவர்களின் உடல் நெருப்பில் கருகி வெந்துபோகாமல் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

கருத்து: சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி சுழுமுனை நாடியை சுத்தப்படுத்தி சகஸ்ரதளத்தில் சேர்த்து பின்பு உடலில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் அனுப்பும் பயிற்சியை செய்பவர்களின் உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #727

பாடல் #727: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

விளக்கம்:

பாடல் #726 ல் உள்ளபடி மூச்சுசுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் சாயந்திர நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மத்தியான நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்றுவிதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை நாள் முழுவதும் செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல் உடலும் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும்.

கருத்து: கபம் பித்தம் வாதம் ஆகிய மூன்றும் உடலுக்கு வரும் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். சரியான நேரத்தில் பாடல் #726 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் மூலம் கபம் பித்தம் வாதம் மூன்றையும் நீக்கலாம். அதே யோகத்தை நாள் முழுவதும் செய்தால் உடலில் நோய் இல்லாமல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.

பாடல் #728

பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

விளக்கம்:

மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

கருத்து: கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #729

பாடல் #729: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.

விளக்கம்:

பிங்கலை இடகலை நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வலதும் இடதுமாக உள்ளிழுத்து நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) அடக்கி வைத்து ஆறு மாத்திரை அளவிற்கு (3 வினாடிகள்) சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வைத்திருந்து பிறகு நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) உடலிலுள்ள அனைத்து நாடிகளுக்கும் கொண்டு செல்லும் சுழற்சியைத் தொடர்ச்சியாக செய்தால் ஆயுளை எப்போதும் கூட்டிக்கொண்டே இருக்கலாம்.

கருத்து: அகயோகப் பயிற்சியை முறைப்படி தொடர்ச்சியாக செய்ய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.