பாடல் #908 இல் உள்ளபடி திருக்கூத்தின் சூட்சுமமாக இருக்கும் சிவயநம மந்திரத்தை அறிந்து எட்டாயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில் உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் சாதகர்கள் இறைவனை அடையும் சூட்சுமமான பாதையை காண்பார்கள். அந்த பாதையில் செல்லும் சாதகர்கள் தங்களின் பல ஜென்மங்களாக தொடரும் சூட்சுமமான வினைகளை அழித்துவிடலாம். வினைகள் அழிந்த பின் இறைவனை உணர்ந்து பேரின்பத்தில் திளைத்திருக்கலாம்.
ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனந்தம் என்று என்று அறைந்த இடம் ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்ற ஐந்து இடம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம்-ஹ்ரீம்-ஹம்-க்ஷம்-ஹாம் ஆகுமே.
விளக்கம்:
பாடல் எண் 909 இல் உள்ளபடி கிடைத்த பேரின்பம் என்று அழைக்கப்படுகின்ற அனைத்தும் அடங்கியிருக்கும் இடமே பேரின்பமாகும். இந்த பேரின்பம் ஆ, ஈ, ஊ, ஏ, ஓம் ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களில் அடங்கியிருக்கின்றது. இந்த ஐந்து மந்திரங்களும் பேரின்பத்தின் வடிவமாக இருக்கின்றது. இந்த ஐந்து மந்திரங்களின் ஒலி வடிவமாக அம், ஹ்ரீம், ஹம், க்ஷம், ஹாம் ஆகிய ஐந்து பீஜங்கள் இருக்கிறன.
ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி இரண்டும் மிகார விகாரியா மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்று மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்தே.
விளக்கம்:
இறைவனது சொரூபமும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றை விட்டு ஒன்று விலகிவிடாமல் மூச்சுக்காற்றோடு சேர்த்து ஜெபிக்கும் போது இறைவனது சொரூபமும் சாதகருடைய ஆன்மாவின் சொரூபமும் ஒன்றுக்கு ஒன்று அளவில் மாறுபடாமலும் ஒன்றோடு ஒன்று வேறுபடாமலும் இருக்கும். இறைவனது சொரூபமானது ஊ ஆ ஈ ஏ ஓ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் உயிர்களுடைய ஆன்மாவின் சொரூபமானது ஈ ஓ ஊ ஆ ஏ ஆகிய ஐந்து ஆதார மந்திரங்களாகவும் இருக்கின்றது. சாதகர்கள் இந்த மந்திரங்களை உச்சரிக்காமல் ஜெபிக்கும் போது இரண்டு சொரூபமும் ஒன்றாக கலப்பதே திருக்கூத்து ஆகும்.
குறிப்பு: இறைவனது சொரூபம் அனைத்திலும் கலந்திருக்கும் பேரொளியாகும். ஆன்ம சொரூபம் என்பது ஒவ்வொரு உயிர்களுடைய சிறிய ஒளி உருவமாகும். இறைவனது பேரொளியும் ஆன்மாவின் சிறிய ஒளியும் ஒன்றாக பாவித்து சாதகம் செய்யும் போது இறையருளால் ஆன்ம ஒளியானது பேரொளியால் காந்தம் போல் கவர்ந்திழுக்கப்பட்டு ஒன்றாக கலப்பதே திருக்கூத்தாகும்.
ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கூத்தே சிவாயநம மசிவா ஆயிடும் கூத்தே ஆ ஈ ஊ ஏ ஓம் நமசிவாய ஆயிடும் கூத்தே ஓம் ஆ ஈ ஊ ஏ யநமசிவா ஆயிடும் கூத்தே ஏ ஓம் ஆ ஈ ஊ வாயநமசி கோளொன்றும் ஆறே.
விளக்கம்:
இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே சிவாயநம என்னும் மந்திரமாக இருக்கின்றது. இந்த மந்திரத்திற்கான ஆதார எழுத்துக்கள் ஊ ஏ ஓம் ஆ ஈ எனும் ஐந்து எழுத்து வடிவங்களாக இருக்கின்றது. இதை பாடல் 904 இல் உள்ளபடி மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்து எழுத்துக்களை மாற்றி மாற்றி அமைத்தால் வரும் திருவம்பலத்தை சக்கரமாக வடிவமைத்தால் அதில் ஒன்பது கோள்களும் அடங்கி இருக்கும்.
குறிப்பு: பாடலில் உள்ளபடி சக்கரம் அமைத்து ஆதார மந்திரங்களை உச்சரிக்காமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் சாதகர்களுக்கு ஒன்பது கோள்களும் இறையருளால் வசப்படும்.
ஒலைச் சுவடியில் உள்ள திருமந்திர பாடலை எளிதாக படிக்க பிரித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றில் இரண்டு ஆட ஓர் ஒன்று உடன் ஆட ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட ஒன்றினிர் நால் ஆட ஓர் ஒன்பதும் ஆட மன்றினில் ஆடினான் மாணிக்கத்து கூத்தே.
விளக்கம்:
அசையா சக்தியாக இருக்கின்ற இறைவன் அசையும் சக்தியோடு சிவசக்தியாக ஆடுகின்ற போது அவரோடு சேர்ந்து அண்டசராசரங்கள் அனைத்தும் ஆடுகின்றன. அசபை மூலம் சாதகம் செய்யும் சாதகர்களின் ஆன்மாவும் சிவசக்தியோடு சேர்ந்து ஆட அவர்களின் உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் அந்த சக்திகளோடு சேர்ந்து ஒன்றாக இணைந்து ஆடுகின்றது. நான்கு திசைகளும் ஒன்பது கோள்களும் சேர்ந்து இறைவன் அண்டசராசரத்தில் ஆடுகின்ற திருக்கூத்தே சாதகரின் உடலாகிய பிண்டத்தில் இறையருள் நிறைந்து மாணிக்க ஜோதியாக திருக்கூத்தாடும்.