பாடல் #1201

பாடல் #1201: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத் தம்மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தியில் வைத்துச் சமாதிசெய் வீரே.

விளக்கம்:

பாடல் #1200 இல் இறைவி தமது சிந்தையில் வைத்து அருளிய திருவடிகளை சாதகர்கள் தமது தலைக்கு உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலும் சகஸ்ரதளத்திற்கு முன்பு இருக்கின்ற ஆதார சக்கரங்களிலும் இறுதியில் இருக்கின்ற மூலாதாரத்திலும் வைத்து தம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தில் மாயையால் நடக்கும் நன்மை தீமைகளில் எண்ணங்களைப் போக விடாமல் இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணுகின்ற எண்ணங்களில் இறைவியின் திருவடிகளை வைத்து பிறகு அனைத்திலும் வைத்த இறைவியின் திருவடிகளை ஒருமுகமாக ஒரே இடமாக்கி வைத்து சமாதி நிலையில் தியானித்து இருங்கள்.

கருத்து:

ஏழு ஆதார சக்கரங்களிலும் எண்ணங்களிலும் இறைவியின் திருவடிகளை வைத்து தியானித்த பிறகு இப்படி எட்டு இடங்களிலும் வைத்த இறைவியின் திருவடிகளை ஒரே இடமாக்கி வைத்து தியானிக்கும் போது சமாதி நிலையை அடையலாம்.

பாடல் #1202

பாடல் #1202: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்
சிவாதியி லாருஞ் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது வோதில்
உவாதி யவளுக் குறைவில தாமே.

விளக்கம்:

பாடல் #1201 இல் உள்ளபடி இறைவியின் திருவடிகளையே தியானித்து சமாதி நிலையில் வீற்றிருக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்து இறைவனோடு சேர்ந்து இருக்கின்றவளும் வில் போல் வளைந்த நெற்றியைக் கொண்டவளுமான இறைவியே தலைவியாக வீற்றிருந்து பாடல் #871 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் ஒன்பது மண்டலங்களுக்கும் முதன்மை சக்தியாக விளங்கி அவளது கருணையால் பாடல் #1193 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து எழுந்த மந்திரத்தை தானாகவே ஒன்பது மண்டலங்களுக்கும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் படி செய்து சாதகரின் உடலையே தமக்கு மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1203

பாடல் #1203: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதிடி லெய்திட லாமே.

விளக்கம்:

பாடல் #1202 இல் உள்ளபடி இறைவி தமக்கும் மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டிருக்கும் சாதகருடன் தொடர்ந்து பலகாலம் முறைப்படி அவரது தன்மையிலேயே கலந்து நிற்கின்ற இறைவியானவள் நறுமணம் கமழ்கின்ற மலர்களைச் சூடியிருக்கும் பேரழகு வாய்ந்த கூந்தலை உடையவளாக அவருக்குள்ளிருந்து எப்போதும் நறுமணம் வீசிக்கொண்டு சேர்ந்தே இருக்கின்றாள். இப்படி இருக்கின்ற இறைவியோடு சமாதி நிலையில் பலகாலம் இருந்தால் இறைவனுடன் அவனது அம்சமாகவும் அவனுக்கு சரிசமமாகவும் இருக்கின்ற நான்கு வேதங்களையும் இறைவனின் உண்மை ஞானத்தையும் ஒரு கண நேரத்தில் பெற்று உணர்ந்து விடலாம்.

கருத்து:

சமாதி நிலையை அடைந்த சாதகருக்குள்ளிருந்து இறைவியானவள் நறுமணத்தை வீசிக்கொண்டே இருக்கின்றாள். இந்த நிலையில் பலகாலம் இருப்பவர்களுக்கு ஒரு கண நேரத்தில் இறைவனையும் அவரது அம்சமாக இருக்கின்ற வேங்களையும் உணர்ந்து கொள்ள முடியும்.

பாடல் #1204

பாடல் #1204: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

எய்திட லாகு மிருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவ மின்றி கருத்துறும் வாறே.

விளக்கம்:

பாடல் #1203 இல் உள்ளபடி ஒரு கண நேரத்தில் இறைவனையும் அவனது அம்சமான வேதங்களையும் உணர்ந்து கொண்ட சாதகர்கள் தங்களின் நல் வினை தீ வினை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் நீங்கப் பெற்று பார்த்தவுடன் கொய்ய நினைக்கும் அழகிய குருத்து இலைகளைக் கொண்ட இளம் கொடி போன்ற திருமேனியை உடையவளும் கன்னித் தன்மையோடு இருக்கும் பேரின்ப அமிழ்தத்தைக் கொடுக்கும் அழகிய திருமுலைகளைக் கொண்டு என்றும் இளமையாக இருப்பவளும் கருமையான மையைத் தீட்டியிருக்கும் பேரழகுடன் அருளுகின்ற கண்களை உடையவளும் நன்மையான இனிமையைக் கொடுக்கின்ற திருக்கரங்களை உடையவளும் ஆகிய இறைவியின் எண்ணங்களும் தமது எண்ணங்களும் ஒன்றாகப் பெற்று மாய எண்ணங்கள் எதுவும் இன்றி இருக்கும் வழியை அடைந்து விடுவார்கள்.

கருத்து:

இறைவனையும் வேதங்களையும் உணரப் பெற்ற சாதகர்கள் தங்களின் இரண்டு விதமான வினைகளையும் நீங்கப் பெற்று இறைவியைப் போன்ற மென்மையான திருமேனியைப் பெற்று என்றும் இளமையுடன் இறைவியின் அருளால் பெற்ற பேரின்பத்தில் திளைத்து இருந்து இறைவியைப் போலவே தமது கண்களினால் அருளைக் கொடுக்கின்ற நிலையை அடைந்து தம்மை நாடி வந்தவர்களுக்கு அபயம் கொடுக்கின்ற திருக்கரங்களைப் பெற்று தமது மாயையான எண்ணங்கள் நீங்கி இறைவியின் எண்ணங்களும் தமது எண்ணங்களும் வேறில்லை என்ற நிலை பெற்று வீற்றிருப்பார்கள்.

பாடல் #1205

பாடல் #1205: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்தி யிருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை யுன்னி யுணர்ந்திடு மண்மேல்
இருத்திடு மெண்குண மெய்தலு மாமே.

விளக்கம்:

பாடல் #1204 இல் உள்ளபடி சாதகரின் மாயையான எண்ணங்கள் நீங்கி இறைவியின் எண்ணமும் தமது எண்ணமும் வேறில்லை எனும் நிலை பெறும் போது அந்த ஒன்றுபட்ட எண்ணத்தில் வீற்றிருக்கும் இறைவியை மனதிலும் வைத்து வேறு எதிலும் செல்லாமல் தடுத்து நிறுத்தி தியானத்தில் வீற்றிருந்து எண்ணமும் மனமும் பாடல் #1201 இல் உள்ளபடி சாதகருக்குள் ஒரே இடமாக்கி அதிலிருந்து உருவாகும் மேல் நிலையான இறைவியை ஒருமுகமாக எண்ணி தியானித்தால் இந்த பிறவியிலேயே மேல் நிலையான இறைவியிடமிருந்து பெறக்கூடிய எட்டு விதமான சித்திகளையும் சாதகரால் பெற்றுக் கொள்ள முடியும்.

பாடல் #1206

பாடல் #1206: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமையொன் றேறி யகம்படி யானென
ஓமென்று வோதியெம் முள்ளொளி யாய்நிற்கும்
தாம நறுங்குழற் றையலைக் கண்டபின்
சோம நறுமலர் சூடிநின் றாளே.

விளக்கம்:

ஆமை தனது தலையையும் நான்கு கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளுவது போல சாதகர் தமக்குள் இருக்கும் ஐந்து புலன்களையும் வெளிப்புறத்தில் கவனம் செல்லாது தடுத்து தமக்குள் அடக்கி வைத்து ஓம் எனும் மந்திரத்தை ஓதிக்கொண்டே இருந்தால் சாதகருக்குள் சூழ்ந்திருக்கும் இருளுக்குள் மறைந்து உள்ளுக்குள் ஒளியாக நிற்கும் நறுமணம் வீசுகின்ற கூந்தலுடன் ஒன்றோடு ஒன்று தைப்பது போல சாதகரோடு பிண்ணிப் பிணைந்து இருக்கின்ற இறைவியை தரிசித்து விட்டால் அதன் பிறகு அவளே சாதகரின் தலை உச்சிக்கு மேலே இருக்கும் ஒன்பதாவது மண்டலமாகிய சந்திர மண்டலத்தில் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடிக்கொண்டு இருக்கிறாள் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.

கருத்து:

சமாதியில் இருக்கும் சாதகருக்குள் மாயை எனும் இருளுக்குள் மறைந்து ஒளியாக இருக்கும் இறைவியை தனது ஐந்து புலன்களையும் அடக்கி ஓங்கார மந்திரத்தை செபிப்பதின் மூலம் தரிசித்து விட்டால் அதன் பிறகு அந்த மாயை இருள் நீங்கி பேரொளிப் பிரகாசமாக சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கின்ற இறைவியே தமக்குள் ஒளியாக இருக்கின்றாள் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளலாம்.

பாடல் #1207

பாடல் #1207: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சூடிடு மங்குச பாசத் துளைவழி
கூடு மிருவளை கோலக்கைக் குண்டிகை
நாடு மிருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடு சீர்புனை யாடக மாமே.

விளக்கம்:

பாடல் #1206 இல் உள்ளபடி சந்திர மண்டலத்தில் நறுமணம் வீசுகின்ற மலர்களை சூடிக்கொண்டு இருக்கின்ற இறைவியானவள் தனது கைகளில் ஆணவத்தை அடக்குகின்றா அங்குசத்தையும் உயிர்களின் பிணைப்பாகிய பாசக் கயிறையும் வைத்துக் கொண்டு சுழுமுனை நாட வழியே சென்று அடைகின்ற இடமாக வீற்றிருக்கின்றாள். இரண்டு கைகளிலும் வளைகள் அணிந்து பேரழகு வாய்ந்த அவளது திருக்கரங்களில் உடுக்கையையும் நெருப்பு சட்டியையும் வைத்துக் கொண்டு சாதகர்கள் நாடுகின்ற இறைவன் இறைவி எனும் இரண்டு திருவடிகளைக் கொண்டு நன்மையின் வடிவமாக முலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை நீண்டு இருக்கும் சுழுமுனை நாடியில் உருத்திர நடராஜ வடிவமாக நின்று திருநடனம் புரிந்து கொண்டு இருக்கின்றாள். சீரும் சிறப்பும் மிக்க அவளோடு சாதகர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவரது உள்ளமே இறைவனும் இறைவியும் சேர்ந்து நடராஜ உருவமாக திருநடனம் புரிகின்ற அம்பலமாக மாறிவிடும்.

கருத்து:

சந்திர மண்டலத்தில் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியை தமக்குள் அறிந்து கொண்டு உணர்ந்து விட்ட சாதகர்கள் அவளோடு தாமும் ஒன்றாக சேர்ந்து விட்டால் அவரது உள்ளமே இறைவனும் இறைவியும் சேர்ந்து நடராஜ உருவமாக திருநடனம் புரிகின்ற அம்பலமாக ஆகிவிடும்.

பாடல் #1208

பாடல் #1208: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமயன் மாலர னீசன் சதாசிவன்
தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்
காமனுஞ் சாம னிரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1207 இல் உள்ளபடி அம்பலமாக ஆகிவிட்ட சாதகருக்குள் திருநடனம் புரிகின்ற நடராஜ உருவத் தத்துவத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்ற பிரம்மன் திருமால் உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் ஆகிய ஐந்து தேவர்களையும் தமக்குள் உணர்ந்து அவர்களின் திருவடிகளைத் தொழுது நின்று சாதகர் அவர்களின் திருவடிப் பேற்றை அடைந்தார். அவ்வாறு அடைந்த பிறகு சாதகருக்குள் தூமாயையாக இருக்கும் காமனாகிய ஆசையும் புதனாகிய பற்றுக்களும் சாதகர் சமாதி நிலையை அடைவதற்கு உதவுகின்ற சூரிய மண்டலம் மூலாதார அக்னி சந்திர மண்டலம் ஆகிய மூன்று அங்கங்களும் சேர்ந்து இறைவியை நாடி வந்து அவளின் திருவடியில் சரணாகதியாகத் தொழுது நிற்கும் போது இறைவி அவர்களை ஆட்கொண்டு வீற்றிருந்தாள்.

பாடல் #1209

பாடல் #1209: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சூடு மிளம்பிறை சூலி கபாலினி
நீடு மிளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞான முருவநின்
றாடு மதன்வழி யண்ட முதல்வியே.

விளக்கம்:

பாடல் #1208 இல் உள்ளபடி சாதகர்கள் நாடி வந்து திருவடியில் சரணாகதியாகத் தொழுது நிற்கும் போது அவர்களை ஆட்கொண்டு நிற்கின்ற இறைவியானவள் தன் திருமுடியில் இரு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட பிறைச் சந்திரனை சூடிக் கொண்டும் தனது திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்திக் கொண்டும் திருக்கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து கொண்டும் நீண்டு வளர்ந்து என்றும் இளமையாக இருக்கும் பசுமையான கொடியைப் போலவும் எந்தவிதமான மலங்களும் இல்லாமல் தூய்மையானவளாகவும் அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டும் வீற்றிருக்கின்றாள். நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் உண்மை ஞானத்தின் சொரூபமாய் நின்று பாடல் #1207 இல் உள்ளபடி அவள் ஆடுகின்ற திருக்கூத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அண்ட சராசரங்களையும் ஆட்டி வைத்து அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றாள்.

பாடல் #1210

பாடல் #1210: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

அண்ட முதலாய் அவனி பரியந்தங்
கண்டதொன் றில்லை கனங்குழை யல்லது
கண்டனுங் கண்டியு மாகிய காரணங்
குண்டிகை கோளிகை கண்டத னாலே.

விளக்கம்:

பாடல் #1209 இல் உள்ளபடி அண்டத்தின் முதல்வியாய் இருக்கும் இறைவியே அண்ட சராசரங்கள் முதல் உலகங்கள் அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து பரிபாலிக்கிறாள் இவளைத் தவிர வேறொரு சக்தியை யாம் கண்டது இல்லை. இருந்தாலும் இறைவி மட்டும் தனியாக நின்று உலகங்கள் அனைத்திற்கும் முதல்வியாக இல்லாமல் சிவப் பரம்பொருளோடு கூடி நின்றே அனைத்திற்கும் முதல்வியாக இருக்கின்றதன் காரணம் உலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களும் படைப்புக்கான இயற்கையில் ஆண் பெண் எனும் இரு நிலைகளில் நிற்பதே ஆகும்.