பாடல் #1308

பாடல் #1308: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒரு மிதுவெ யுரையுமித தெயவததைத
தெரிற பிறிதிலலை யானொனறு செபபககெள
வாரித திரிகொண மனவினப முததியுந
தெரி லறியுஞ சிவகாயந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓரும் இதுவே உரையும் இத் தெய்வத்தை
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக் கேள்
வாரித் திரிகோண் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.

பதப்பொருள்:

ஓரும் (சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிகின்ற) இதுவே (இந்த புவனாபதி சக்கரமே) உரையும் (யானும் எடுத்துச் சொல்கின்ற) இத் (இந்த) தெய்வத்தை (தெய்வத்தைப் பற்றி)
தேரில் (உணர்ந்து அறிந்து கொண்டால்) பிறிது (வேறொரு தெய்வமே) இல்லை (தேவை இல்லை) யான் (யாம்) ஒன்று (ஒரு விஷயத்தை) செப்பக் (சொல்லும்படி) கேள் (கேளுங்கள்)
வாரித் (உங்களுக்கும் மானசீகமாக வருவித்த) திரிகோண் (மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில்) மனம் (உங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால்) இன்ப (பேரின்பமும்) முத்தியும் (முக்தியும்)
தேரில் (என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்) அறியும் (அப்படி அறிந்து கொண்ட பிறகு) சிவ காயம் (சிவ உருவம் எது என்பதையும்) தானே (உங்களால் அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1307

பாடல் #1307: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
யகராதி யோரக் கரத்தமே போலுஞ்
சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரதி யொரைநதுங காணிய பொனமை
யகராதி யொர ககரததமெ பொலுஞ
சராதி நாலஞசு தானசுதத வெணமை
மகராதி மூவிததை காமிய முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ககர ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர ஆதி ஓர் அக் அரத்தமே போலும்
சகர ஆதி நால் அஞ்சு தான் சுத்த வெண்மை
மகர ஆதி மூவித்தை காமிய முத்தியே.

பதப்பொருள்:

ககர (ககாரம் / க எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) ஐந்தும் (ஐந்து எழுத்துக்களும்) காணிய (தங்களுக்குள் தரிசித்தால்) பொன்மை (அவை பொன் நிறத்தில் இருக்கும்)
அகர (அகாரம் / அ எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அக் (சுத்த) அரத்தமே (சிவப்பு நிறமே) போலும் (போல இருக்கும்)
சகர (சகாரம் / ச எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) நால் அஞ்சு (நான்கும் ஐந்தும் பெருக்கி வரும் இருபது எழுத்துக்களும்) தான் (தமது தன்மையில்) சுத்த (சுத்தமான) வெண்மை (வெள்ளை நிறத்தில் இருக்கும்)
மகர (உயிர்களுக்கு) ஆதி (ஆதியிலிருந்தே தொடர்ந்து வருகின்ற) மூவித்தை (படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து மேலுள்ள மந்திரங்களைத் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால்) காமிய (ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்மங்களும் அழிந்து) முத்தியே (முத்தியை இறையருளால் அடையலாம்).

விளக்கம்:

ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கின்ற ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தங்களுக்குள் தரிசித்துப் பார்த்தால் அவை பொன் நிறத்தில் இருக்கும். அது போலவே இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கின்ற எழுத்துக்கள் அனைத்துமே சுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும். அது போலவே மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கின்ற இருபது எழுத்துக்களும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற புவனாபதி சக்கரத்தில் இருக்கின்ற இந்த மூன்று எழுத்துக்களையும் அதன் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மானசீகமாகத் தமக்குள் தரிசிக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால் ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.