பாடல் #201: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
விளக்கம்:
எனக்கு இவள்தான் என்று உறுதிமொழி கூறி திருமணம் செய்த அன்பான மனைவி தமது வீட்டில் இருக்கும்போதே மற்றொருவர் திருமணம் செய்து பாதுகாத்து வைத்திருக்கும் மனைவியர் மீது ஆசைப்படும் இளைஞர்கள் தமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காய்த்து பழுத்துத் தொங்கும் பலாப் பழத்தை சாப்பிட விரும்பாமல் எங்கோ முட்காட்டுச் செடிகளுக்கு நடுவே வளர்ந்து கிடக்கும் ஈச்சம் பழத்தைச் சாப்பிட ஆசைப்படுவது போன்ற முட்டாள்தனம்.