பாடல் #199: முதல் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (அசைவம் சாப்பிடாமல் இருத்தல்)
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தினுள்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பார்களே.
விளக்கம்:
பிற உயிர்களை கொன்று அதன் உடலிலிருந்து பெறுவதாலும் மனித உடலுக்கு தீமை தருவதாலும் பொல்லாத புலாலை (அசைவத்தை) விரும்பிச் சாப்பிடும் கீழ்மையான மக்களை அவர்கள் இறக்கும் தறுவாயில் அவர்களைச் சுற்றி நின்ற அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எமதர்மனின் தூதுவர்கள் வந்து கரையானைப் போல இறுக்கமாகப் பற்றி இழுத்துக் கொண்டு போய் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் கொடிய நரகத் தீயினுள் அவர்களின் முதுகு கீழே பட முகமும் உடலும் மற்றவர்கள் பார்க்கும் படி மேலே தெரிய மல்லாக்கத் தள்ளிவிட்டு அவர்கள் சுடும் தீயிலிருந்து தப்பிச்செல்லாமல் இருக்க கதவுகளையும் மூடிவிடுவார்கள்.
கருத்து: பிற உயிர்களுக்குத் துன்பம் தந்து பெற்ற கொடிய புலாலை விரும்பி சாப்பிடுபவர்கள் இறந்த பின் கொடிய நரகத் தீயில் எப்போதும் வெந்துகொண்டே இருப்பார்கள்.