பாடல் #1455: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)
பத்தன் கிரிகை சரிதை பவில்வுற்றுச்
சுத்த வருளாற் றுரிசற்ற யோகத்தி
லுய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பததன கிரிகை சரிதை பவிலவுறறுச
சுதத வருளாற றுரிசறற யொகததி
லுயதத நெறியுற றுணரகினற ஞானததாற
சிததங குருவரு ளாறசிவ மாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பத்தன் கிரிகை சரிதை பவில் உற்று
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.
பதப்பொருள்:
பத்தன் (பக்தியின் முறைமையை கடைபிடிக்கின்ற பக்தன்) கிரிகை (கிரியையும்) சரிதை (சரியையும்) பவில் (முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே) உற்று (குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது)
சுத்த (இறைவனின் தூய்மையான) அருளால் (அருளால்) துரிசு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத) யோகத்தில் (யோகம் கிடைக்கப் பெற்று)
உய்த்த (தமக்கு கிடைத்த மேன்மையான) நெறி (வழியை) உற்று (குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது) உணர்கின்ற (அதன் பயனால் தமக்குள் உணர்கின்ற) ஞானத்தால் (உண்மை ஞானத்தின் வழியாக)
சித்தம் (சித்தம் தெளிவு பெற்று) குரு (குருவாக இருக்கின்ற இறைவனின்) அருளால் (அருளால்) சிவம் (தமது சித்தம் சிவமாகவே) ஆகுமே (ஆகி விடும்).
விளக்கம்:
பாடல் #1454 இல் உள்ளபடி பக்தியின் முறையை கடைபிடிக்கின்ற பக்தன் கிரியையும் சரியையும் முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது இறைவனின் தூய்மையான அருளால் யோகம் கிடைக்கப் பெறும். அப்படி தமக்கு கிடைத்த மேன்மையான யோக வழியை குறிக்கோளாகக் கொண்டு ஒரு குற்றமும் இல்லாமல் செய்யும் போது அதன் பயனால் தமக்குள் உண்மை ஞானத்தை உணரலாம். அப்படி உணர்ந்த உண்மை ஞானத்தின் வழியாக சித்தம் தெளிவு பெற்று குருவாக இருக்கின்ற இறைவனின் அருளால் அவர் தமது சித்தம் சிவமாகவே ஆகி விடும்.