பாடல் #1509: ஐந்தாம் தந்திரம் – 14. சாமீபம் (இறைவன் இருக்கின்ற இடத்தில் அவருக்கு அருகிலேயே இருப்பது)
பாசம் பசுவான தாகுமிச் சாலோகம்
பாசம ருளான தாகுமிச் சாமீபம்
பாசஞ் சிவமான தாகுமிச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச்சிய மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பாசம பசுவான தாகுமிச சாலொகம
பாசம ருளான தாகுமிச சாமீபம
பாசஞ சிவமான தாகுமிச சாரூபம
பாசங கரைபதி சாயுசசிய மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பாசம் பசு ஆனது ஆகும் இச் சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இச் சாமீபம்
பாசம் சிவம் ஆனது ஆகும் இச் சாரூபம்
பாசம் கரை பதி சாயுச்சியம் ஆமே.
பதப்பொருள்:
பாசம் (உலகப் பற்றுக்களானது) பசு (ஆன்மாவாக) ஆனது (இருக்கின்ற உயிர்களுக்குள்) ஆகும் (மாயையால் மறைத்து இருக்கும் போது இறைவனை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு) இச் (இந்த உலகத்திலேயே) சாலோகம் (இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும்)
பாசம் (அந்த சாதகத்தை தொடர்ந்து செய்யும் போது உலகப் பற்றுக்களானது சிறுது சிறிதாக விலகி) அருள் (இறையருள் பெருகி) ஆனது (தம்மை) ஆகும் (அதுவே) இச் (இந்த உலகத்திலேயே) சாமீபம் (இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையை கொடுக்கும்)
பாசம் (அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தை செய்யம் போது உலகப் பற்றுக்களானது நீங்கி இறைவனின் மேல் பற்று கொள்ளும் படி) சிவம் (சிவமாகவே) ஆனது (தம்மையும்) ஆகும் (ஆகும் படி செய்து) இச் (இந்த உலகத்திலேயே) சாரூபம் (இறைவனின் ஒளி உருவத்தை பெறுகின்ற நிலையை கொடுக்கும்)
பாசம் (அந்த நிலையிலும் மேன்மை பெற்று சாதகத்தை தொடரும் போது பற்றுக்கள் அனைத்தும்) கரை (முழுவதுமாக நீங்கி முக்திக்கு எல்லையாக இருக்கின்ற) பதி (இறைவனிடம் சென்று சேரும் படி செய்து) சாயுச்சியம் (இறைவனுடனே எப்போதும் இருக்கின்ற நிலையை) ஆமே (கொடுக்கும்).
விளக்கம்:
உலகப் பற்றுக்களானது ஆன்மாவாக இருக்கின்ற உயிர்களுக்குள் மாயையால் மறைத்து இருக்கும் போது இறைவனை அடைய வேண்டும் என்று சரியை கிரியை யோகம் ஞானம் ஆகியவற்றின் மூலம் சாதகம் செய்கின்ற உயிர்களுக்கு இந்த உலகத்திலேயே இறைவன் இருக்கின்ற இடத்திற்கு அருகில் செல்லுகின்ற நிலை கிடைக்கும். அந்த சாதகத்தை தொடர்ந்து செய்யும் போது உலகப் பற்றுக்களானது சிறுது சிறிதாக விலகி இறையருள் பெருகி தம்மை அதுவே இந்த உலகத்திலேயே இறைவனுக்கு மிகவும் அருகில் செல்லுகின்ற நிலையை கொடுக்கும். அந்த நிலையிலும் தொடர்ந்து சாதகத்தை செய்யம் போது உலகப் பற்றுக்களானது நீங்கி இறைவனின் மேல் பற்று கொள்ளும் படி சிவமாகவே தம்மையும் ஆகும் படி செய்து இந்த உலகத்திலேயே இறைவனின் ஒளி உருவத்தை பெறுகின்ற நிலையை கொடுக்கும். அந்த நிலையிலும் மேன்மை பெற்று சாதகத்தை தொடரும் போது பற்றுக்கள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி முக்திக்கு எல்லையாக இருக்கின்ற இறைவனிடம் சென்று சேரும் படி செய்து இறைவனுடனே எப்போதும் இருக்கின்ற நிலையை கொடுக்கும்.