பாடல் # 795 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.
விளக்கம் :
மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.