பாடல் #737: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.
விளக்கம்:
சுழன்று அடிக்கின்ற சூறாவளிக் காற்றின் நடுவில் சிக்கி தேர் அலைந்து திரிவது போல இறப்பு பிறப்பு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்ட உயிர்கள் பிறவித் துன்பத்தில் கிடந்து அலைகின்றன. இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கும் இறைவன் உயிர்களின் உடலுக்குள்ளேயே பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் தோன்றும் நீல நிற ஜோதியில் ஒளியுருவமாக வீற்றிருக்கின்றான். அகயோகம் செய்து நீல நிற ஜோதியின் நடுவில் இறைவனின் ஒளியுருவத்தைத் தரிசித்து அவனது திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பின் ஓசையும் கேட்டு அதிலேயே சிந்தனையை வைத்திருக்கும் சாதகர்கள் இறப்பு பிறப்பு என்கிற பிறவிச் சுழற்சி நீங்கி எப்போதும் பேரின்பத்தில் இறைவனின் திருவடி நிழலிலேயே வீற்றிருப்பார்கள்.
கருத்து: அகயோகம் செய்து இறைவனின் திருவடியை நெற்றிக்குள் தரிசிக்க பிறவி எனும் பெருந்துன்பம் தீர்ந்து இறப்பும் பிறப்பும் இன்றி எப்போதும் இறைவனது திருவடியிலேயே இருக்கலாம்.