பாடல் #731: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம்
மறிப்பது மந்திர மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.
விளக்கம்:
ஒரு மாசுமில்லாத தூய்மையான ஒளியுருவான சிவத்தின் அம்சமாக விளங்கும் அ எனும் எழுத்தையும் மாமாயையின் ஒலியுருவான சக்தியின் அம்சமாக விளங்கும் ச எனும் எழுத்தையும் மனதுக்குள் உச்சரிக்கும்பொழுது தோன்றும் அசபை மந்திரத்தை சத்தமாகச் சொல்லாமல் மனதுக்குள்ளேயே ஓதி மனனம் செய்வது அகயோகத்தைக் கடைபிடிக்கும் யோகியர்களுக்கான தர்ம வழியாகும்.
கருத்து: அகயோகம் செய்யும் யோகியர்கள் அம்ச எனும் அசபை மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஓதுவது அவர்களுக்கான தர்மவழியாகும். இதை முறைப்படி குருவிடம் பெற்று பயன்படுத்துதல் வேண்டும்.