பாடல் #713: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.
விளக்கம்:
உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.
கருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.
நான்கு அந்தக்கரணங்கள்:
- மனம்
- புத்தி
- சித்தம்
- அகங்காரம்
பதினாறு கலைகள் (நாடிகள்):
- மேதைக்கலை
- அருக்கீசக்கலை
- விடக்கலை
- விந்துக்கலை
- அர்த்தசந்திரன் கலை
- நிரோதினிக்கலை
- நாதக்கலை
- நாதாந்தக்கலை
- சக்திக்கலை
- வியாபினிக்கலை
- சமனைக்கலை
- உன்மனைக்கலை
- வியோமரூபினிக்கலை
- அனந்தைக்கலை
- அனாதைக்கலை
- அனாசிருதைக்கலை
1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்
2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.
3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.
4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.
5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.
6. நிரோதினிக்கலை,
7. நாதக்கலை,
8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.
9. சக்திக்கலை,
10. வியாபினிக்கலை,
11. சமனைக்கலை,
12. உன்மனைக்கலை, ஆகிய நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.
13. வியோமரூபிணிக் கலை
14. அனந்தைக் கலை
15. அனாதைக் கலை,
16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.
ஐயா, இப்பாடலில் உள்ள ‘கலை’ என்னும் சொல்லிற்கு பொருள் யாது?. ஆயகலைகள் 64 என்று உள்ளதே, அக்கலைக்கும், இங்கு கூறப்பட்ட கலையும் ஒன்றா??
குறிப்பு: கலைகள் என்பது என்னவெனில் மூச்சுக்காற்று எப்படி தானாக உள்ளேயும் வெளியேயும் எப்படி சென்று வருகின்றது என்பதை குறிப்பதாகும்.
மேலும் அறிந்துகொள்ள பாடல் #852 ல் படித்து அறிந்து கொள்ளலாம்.