பாடல் #625: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.
விளக்கம்:
உயிர்களுக்கு தியானத்தின் மூலம் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு திருவருளால் பரிசாக உள்ளது. இது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதம் ஊறும். அவ்வமுதினை உண்போர்க்கு முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள். தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.