பாடல் #587: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.
விளக்கம்:
பிரத்தியாகாரம் கூறும் மூன்று சக்கர இடங்களில் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம்) மனதை ஒருமுகப்படுத்துவன் உலகம் தோன்றிய நாள் முதல் இறைவனை அடையத் தடையாக இருக்கும் மாயை எனும் அறியாமையாகிய இருளை அகற்றி இறைவனை தேடிச் செல்லலாம். அவ்வாறு இறைவனை விரும்பித் தேட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தால் காணக் கிடைக்காத அரிய இறைக் காட்சியைக் கண்டு அழிவில்லாத நிலையை அடையலாம்.