பாடல் #577: மூன்றாம் தந்திரம் – 5. பிராணாயாமம்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.
விளக்கம்:
நமது உடலின் மூக்குத்துவாரத்திலிருந்து அடிவயிறு வரை பன்னிரண்டு அங்குல அளவிற்குச் சென்று வரும் மூச்சுக்காற்று உள்ளே வருவதும் வெளியே செல்லுவதுமாகிய இரண்டு செயல்களை மட்டுமே செய்து வருகின்றது. இச்செயல்களை ஆன்மா அறியவில்லை. மூக்கிலிருந்து வயிற்றை நோக்கிக் கீழ்ச் செல்லும் மூச்சுக்காற்றை மூக்கிலிருந்து தலை உச்சி நோக்கி மேலே செல்ல பிராணாயாமத்தின் மூலம் முயற்சித்தால் நமது உடலுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

577-ஆம் திருமந்திரத்தின் விளக்கம் மிக அருமை. யானை என்பது மூச்சுக் காற்றைக் குறிக்கின்றது என்பதை அறியும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது. திருமூலர் தாத்தா எவ்வளவு நுணுக்கத்துடன் பிராணாயாமத்தின் பயனை மனதில் பதியும் வண்ணம் சொல்லி உள்ளார் என்பதை அறியும் பொழுது அகம் மிக மகிழ்கிறோம்.
கலைமாமணி, முனைவர் சேயோன்
மூச்சுக்காற்றை உயிர் சார்ந்த ஆக்சிஜன் என்று அக்குபஞ்சர் விளக்கம் தருகிறது. அவ்வாறாயின் இந்த மூச்சுக்காற்று அக்குபஞ்சரில் 12 உறுப்புகள் வழியாக செல்வதால் இந்த மூச்சுக்காற்று 12 யானை வடிவம் எடுக்கிறது என்றும் கருதலாம்-அக்குபங்சர் ஆசான் ஆ மதியழகன் ☯️20/01/2023