பாடல் #429: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)
பாழே முதலா எழும்பயிர் அவ்விடம்
பாழே அடங்கினும் பண்டைப்பாழ் ஆகாவாம்
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
விளக்கம்:
சேற்றுச் சகதியில் விதைத்த விதை அந்தச் சகதியையே ஆதாரமாகக் கொண்டு அதனிடமிருந்து வெளிப்பட்டு பயிராக மேலெழும்பி வருவதைப் போல அனைத்திற்கும் பழைமையான இறைவனிடமிருந்து அவனையே முதலாகக் கொண்டு அவனிடமிருந்து வெளிப்பட்டு உலகத்தில் கருவாக வந்து பிறக்கின்றது ஆன்மா. விளைந்த பயிர் பயன்படுத்தப்பட்ட பிறகு அழிந்து திரும்பவும் மண்ணோடு மண்ணாகவே ஆகிவிட்டாலும் அது எப்படி முன்பு விதைத்த விதைக்குள் மீண்டும் போய் சேர முடியாதோ அதுபோலவே உலகத்தில் கருவாக வந்து பிறந்த ஆன்மா உலகத்தில் வாழ்ந்து இறந்த பிறகும் திரும்பவும் இறைவனிடமே சென்று சேர்ந்துவிட முடியாது. இதனாலேயே ஆன்மாவுக்குத் தனித்த வாழ்வு என்பது இல்லாத சங்காரச் சுழற்சியில் தள்ளப்பட்டு மீண்டும் பிரம்மனால் கருவாக பிறந்து திருமாலால் காக்கப்பட்டு வளர்ந்து மறுபடியும் சங்காரத்தில் இறந்து கொண்டே இருக்கும். எப்போது மண்ணில் பிறந்த பயிர் மண்ணிலே கலந்து அந்த மண்ணும் ஒரு நாள் மறைந்து போகின்றபோது அந்தப் பயிரின் தடயமே அழிந்து போய்விடுவது போல உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறக்கும் ஆன்மா எப்போது வினைகளை முடித்துத் தான் என்கிற தடயத்தை (ஆணவ மலம்) முற்றிலும் துறந்து மாயைகளை நீக்கி உண்மையை உணருகின்றதோ அப்போது அது தோன்றிய இறைவனிடமே சென்று அடங்கிவிடும்.
உட்கருத்து: ஆன்மாவைப் பயிராகவும் இறைவனை சகதியாகவும் உருவகிக்கும் திருமூலர் இந்த உவமையின் மூலம் சங்காரத்தின் தத்துவமும் அது ஏன் நிகழ்கிறது என்கிற விளக்கத்தையும் தந்து அருளுகிறார். இறைவனிடமிருந்து முதலில் தோன்றிய ஆன்மா உலகத்தில் பிறவி எடுத்து வினையினால் பிறவிச் சுழலில் சிக்கித் தன் வினைகளையெல்லாம் முடித்துவிட்டு பிறகு இறைவனிடமே வந்து அடங்கிவிடுவதே சங்காரத்தின் தத்துவமும் அதன் பயனுமாகும்.