பாடல் #380: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரவன் ஒளியைவென் றானே.
விளக்கம்:
ஊழிக்காலம் முடிந்ததும் இறைவனை சரணடைந்து ஒளி உடலோடு வாழும் அடியவர்களில் ஒருவரை நான்கு முகங்கள் கொண்டு படைத்தல் தொழில் புரியும் பிரம்மனின் தொழிலை செய்ய இறைவன் தேர்ந்தெடுக்கின்றான். புதியதாக பிரம்மனின் தொழில் பெற்ற அடியவரும் இறைவனை நாடி வந்து என்ன வேலை செய்ய வேண்டும் என்று அதைத் தந்தருளுங்கள் என்று வேண்டிக்கொள்ள ஊழிக்காலத்தில் அனைத்தையும் சுட்டெரிக்கும் சூரியனையும் மிஞ்சி நிற்கும் மாபெரும் ஒளியாகிய இறைவனும் அவருக்கு படைக்கும் தொழிலைக் கொடுத்து அருளினான்.
குறிப்பு: பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்கள் அனைவருமே பல காலமாக இறைவனின் அடியவர்களாக இருந்து தவம் புரிந்தவர்கள்தான். தற்போது இருக்கும் பிரம்மன் திருமால் மற்றும் உலக தொழில்கள் செய்யும் தேவர்களின் பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த அடியவர்களுக்கு அந்த தொழிலை செய்யும் தகுதி இறைவனது திருவருளால் கிடைத்ததும் அவர்களுக்கு ஏற்ற தொழிலை இறைவன் கொடுத்து அருளுகின்றார்.