பாடல் #378: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு
ஆலிங் கனஞ்செய் துலகம் வலம்வரும்
கோலிங்கு அமைஞ்சருள் கூடலு மாமே.
விளக்கம்:
அண்டங்கள் அனைத்தலும் இரண்டறக்கலந்து எழுந்து நின்ற மாபெரும் தீப்பிழம்பான பரம்பொருள் உயிர்கள் தம்மை நாடி வந்து சேர பெருங்கருணை கொண்டு உண்மையான வழிமுறைகளை கொடுத்து உலகத்துப்பொருட்கள் எல்லாவற்றிலும் கலந்து உலா வருகிறது. இறைவனை அடையவேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் அந்த உண்மையான வழிமுறைகளை பின்பற்றினால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.
உட்கருத்து: அடிமுடி காண முடியாத அளவு மிகப்பெரும் மகோன்னதம் மிக்கவனாக இறைவன் காட்டிய நெறி வழிகளைப் பின்பற்றி சென்றால் எல்லாவற்றிலும் கலந்திருக்கும் அடிமுடி காண முடியாத பரம்பொருள் இறைவனை உணரலாம்.