பாடல் #377: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கட லூழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.
விளக்கம்:
நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரம்மனும் கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும் ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களின் உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடனே கலந்து இருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்கள் ஆக முடியாது.