பாடல் #376: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்புஎய்து மாறே.
விளக்கம்:
இறைவனின் சிவந்த திருவடிகளை போற்றி வணங்கும் பலகோடி தேவர்களும், மாபலியிடம் மூன்று அடி நிலம் தா என்று கேட்டு வென்ற திருமாலும் இறைவனிடம் அருள் வேண்டி தவமிருக்கும் முனிவர்களும் இறைவன் வகுத்துக்கொடுத்த வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் பிரம்மனும் எவ்வளவு தூரம் தான் அலைந்து தேடினாலும் இறைவனின் திருவடிகளையோ திருமுடியையோ காண இயலாது.
உள்விளக்கம்: தேவர்கள், முனிவர்கள், திருமால், பிரம்மா என்று எவ்வளவு உயர்ந்த இறைநிலையில் இருந்தாலும் நானே செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இறைவனை தனக்குள் உணராமல் வெளியில் தேடினால் இறைவனை காண இயலாது.