பாடல் #375: இரண்டாம் தந்திரம் – 8. அடிமுடி தேடல் (இறைவனது மகோன்னதம்)
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.
விளக்கம்:
மண்ணுலகிலிருந்து அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு விண்ணுலகமும் தாண்டி நீண்டு வளர்ந்த தீப்பிழம்பாக நின்றான் சதாசிவமூர்த்தி. அவனது அக்னி உருவத்தை ஆராய முற்பட்டு பிரம்மன் இறைவனின் திருமுடியைக் காணவும் திருமால் இறைவனின் திருவடியைக் காணவும் சென்றனர். பிரம்மன் மேல் செல்ல செல்ல இறைவனின் திருமுடி மேலே வளர்ந்து கொண்டே இருக்க திருமால் கீழே செல்ல செல்ல நன்மையை அருளும் இறைவனின் கழல்கள் அணிந்த திருவடி கீழே வளர்ந்து கொண்டே இருந்து இருவருக்கும் எதையும் காண இயலவில்லை.
உள்விளக்கம்: இறைவனை உணர்ந்தால் இறைவன் எந்த ரூபத்தில் இருந்தாலும் இறைவனை அறியலாம். இறைவனை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள முயன்றால் அவரை அறிய இயலாது.