பாடல் #358: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)
அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
விளக்கம்:
திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.
உட்கருத்து: பாடல் #357ல் உள்ள உட்கருத்தின் படி அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.