பாடல் #355: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)
அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகில்
அப்பரி சேஅது நீர்மை யுள்கலந்து
அப்பரி சேசிவனாய் ஆவிக்கின் றானே.
விளக்கம்:
இறைவனை அழிக்க தக்கன் செய்த மாபெரும் யாகத்தில் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு அவிர்பாகங்களை ஏற்க வந்த பிரம்மன் மற்றும் தேவர்கள் அனைவருக்கும் அவரவர் தொழில்களைப் பரிசாக அளித்து அந்தத் தொழில்களைச் செய்யும் சக்தியாகவும் இருக்கும் இறைவனை அழிக்க யாகத்தில் மாபெரும் அக்னி வந்தது அதிசயமாக தெரிந்தாலும். தீயாகவும் தீயை வளர்க்க யாகத்தில் இடும் பொருட்களாகவும் அந்த பொருளின் தன்மையாகவும் அதனை ஏற்று ஆவியாக்குபவனும் இறைவனே.
உட்கருத்து: உயிர்கள் நல்செயல்கள் செய்தால் நல்வினைகள் கிடைத்து சிவனின் அருளும், தீய செயல்கள் செய்தால் தீவினைகள் சேர்ந்து அதற்கான தண்டனைகளும் உயிருக்கு கிடைக்கும் இவை அனைத்திலும் சிவன் அணுவாய் கலந்திருப்பான். அனைத்தும் இறைவனே ஆவதால் நல்லவையானாலும் தீயவையானாலும் அவனின்றி எந்தச் செயலும் நிகழாது.