பாடல் #345: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
விளக்கம்:
மூலாதாரத்தில் எரிந்து கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி அங்கே சகஸ்ரரதளத்தில் சேர்த்து அதைத்தாண்டிய பரவெளியில் இருக்கும் இறைவனை உணரும் உயிர்களுக்கு காலனை உதைத்து சாகா வரம் அளிப்பான் இறைவன். இதை உலகத்தவர்க்கு உணர்த்தும் விதமாகவே திருக்கடவூரின் திருத்தலம் இறைவனின் அருளால் நன்றாக அமைந்தது.
இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். மிருகண்டு முனிவரும் அவருடைய மனைவியான மருத்துவவதி தேவியாரும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்படி இறைவனை வேண்ட குறைந்த ஆயுட்கொண்ட அறிவாளியான குழந்தை வேண்டுமா அல்லது அதிக ஆயுட்கொண்ட முட்டாளான குழந்தை வேண்டுமா என்று இறைவன் கேட்க அறிவாளியான குழந்தையே வேண்டும் என்று கேட்டு மார்க்கண்டேயன் எனும் குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். மார்க்கண்டேயர் பிறந்ததிலிருந்து ஆயுள் அதிகரிக்க இறைவனே சரணடைய வேண்டும் என்று போதித்து வந்தனர். அதனால் மிகச்சிறந்த இறை பக்தனான மார்க்கண்டேயர் எப்போதும் இறை பூஜையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தார். அவரது ஆயுட்காலம் முடியும்போது அவரை மேலுலகம் அழைத்துச்செல்ல எமதருமரும் எந்தப் பூஜையில் இருந்தாலும் அவரது ஆயுள் முடிந்தால் அழைத்துச் செல்லவேண்டியது தமது கடமை என்று எண்ணி அவரை அழைத்துச் செல்ல பாசக் கயிற்றை வீசுகிறார். சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருக்கும்போது பாசக்கயிறு அவரோடு சிவலிங்கத்தின் மீதும் விழ அதிலிருந்து இறைவன் வெளிவந்து எமது பூஜையில் இருக்கும் அடியவர் எவரையும் கொண்டு செல்லும் உரிமை உமக்கு இல்லை என்று கூறி எமதருமரை காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கும் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரமளித்தார்.
உட்கருத்து: தியானத்தில் இருந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அடக்கி அதன் மூலம் மூலாதாரத்தில் எரிந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று ஏழாவதான சக்கரமான சகஸ்ரரதளத்தில் சேர்த்து அங்கு இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் மரண பயம் இன்றி சிரஞ்சீவியாக இறைவனிடம் பேரானந்தத்திலேயே இருக்கலாம்.