பாடல் #343: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாருமறி யாரே.
விளக்கம்:
கங்கையைத் தன் சிவந்த சடையில் சூடியவனும் எல்லாவற்றிற்கும் முதலாயும் மூலமாயும் இருப்பவனுமாகிய இறைவனை முப்புரம் என்னும் இடத்தை எரித்தவன் என்று கூறுபவர்கள் மூடர்கள். அவர்களுக்கும் முப்புரமாக இருப்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பது புரியவில்லை. அவற்றை இறைவன் அழிக்கிறான் என்பதை உணராமல் மூன்று புரங்களை எரித்ததாக கூறுபவர்களில் எவரும் அந்தப் புரங்கள் எரிந்த விதத்தை அறிந்தவர்கள் இல்லை.
இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவதிகை தலமாகும். தாருகாசுரன் என்கிற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் மிகச்சிறந்த இறை பக்தர்கள். அவர்கள் மூவரும் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் செய்து நினைத்த இடத்திற்கு உடனே பறந்து செல்லும் மூன்று கோட்டைகளையும் அவை மூன்றும் ஒன்றாக இருக்கும்போது ஒரேயொரு அம்பினால் மட்டுமே தாங்கள் அழியவேண்டும் என்றும் வரம் பெற்றனர். வரம் கிடைத்ததும் அவர்கள் தேவலோகம் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்தனர். அவர்களின் அதிகாரம் தாங்காமல் தேவர்களும் பிரம்மரும் திருமாலும் இறைவனை வேண்ட மனமிறங்கிய இறைவன் அழகிய பைரவ அவதாரம் எடுத்து தேவதச்சன் விஸ்வகர்மாவிடம் ஒரு தேர் செய்யச் சொல்லி சந்திர சூரியரே தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களே தேரில் பூட்டிய குதிரைகளாகவும் பிரம்ம தேவரே தேரை ஓட்டும் சாரதியாகவும், மேரு மலையே வில்லாகவும், வாசுகி நாகமே வில்லைப் பூட்டும் நாணாகவும், அக்கினி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் வாலாகவும், திருமாலே அம்பாகவும் ஆக்கி எடுத்துக்கொண்டு முப்புரத்தை வந்து சேர்ந்தார். இறை பக்தியில் மிகவும் சிறந்து விளங்கும் அசுரர்களை அழிக்க வேண்டாமென்ற பெருங்கருணையில் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்க்க மூன்று கோட்டைகளும் உடனே எரிந்து சாம்பலாகி மூவரும் இறைவனின் காலடியில் விழுந்து வணங்க இறைவனும் அவர்களை ஆட்கொண்டு தமது கோயிலின் வாயிற் காவலர்களாகவும் இருவரையும் கோயிலில் செய்யும் குடமுழுக்கை ஏற்பவராக ஒருவரையும் ஏற்றுக்கொண்டார்.
குறிப்பு: 113, 114, 115, 118, 210, 212, 218 ஆகிய திருமந்திர பாடல்களில் உயிர்களிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை இறைவன் எப்படி அழித்து உயிர்களை காக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பாடல்களை நமது https://www.kvnthirumoolar.com/topics/thirumanthiram/ வலைதளத்தில் தேடல் பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.