பாடல் #342: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)
எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபால்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.
விளக்கம்:
அனைத்து உயிருக்குள்ளும் எங்கும் எதிலும் இரண்டறக் கலந்திருப்பவனும் அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கு முதல்வனாயும் இருக்கும் இறைவனை உணராமல் உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணராமல் அந்த உயிரை அழிக்க பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட குரோதம் என்னும் அசுர குணத்தை உயிர்களிடம் உள்ள சக்திமய சக்கரங்களை கருவியாக பயன்படுத்தி இறைவன் தனது திருவடி மூலம் அழித்தான்.
இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளி பாற்கடலில் விழுந்தது. அதில் ஒரு குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார் இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான். இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.