பாடல் #272: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொலா மணியினை எய்தவொண் ணாதே.
விளக்கம்:
உடல் எலும்புகளை விறகுகளாக்கி தங்கம் போன்ற பொன்னிறத்தில் தகதகவென எரியும் தீயில் உடல் தசைகளை அறுத்து போட்டு பொன்னிறத்தில் பொரிய வறுத்தாலும் அன்போடு மனம் உருகி உள்ளம் குழைந்தவர்களைத் தவிர வேறு எவராலும் செதுக்கப்படாத தூய்மையான மாணிக்கம் போன்ற இறைவனை சென்று அடைய முடியாது.
கருத்து: உயிர்கள் தமது உடலைக் கொடூரமாக வருத்திக்கொண்டு தவம் புரிந்தாலும் தமது உடலையே தீயிலிட்டு யாகம் புரிந்தாலும் அவர்களிடத்தில் உண்மையான அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்கள் என்ன செய்தாலும் இறைவனை அடைய முடியாது. தூய்மையான அன்பே இறைவனை அடையும் மிகச்சிறந்த வழியாகும்.
nice