பாடல் #271: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடு யாடிக்குப்
பின்னிக் கிடந்ததுஎன் பேரன்பு தானே.
விளக்கம்:
தூய்மையான தங்கத்தைவிட அதிகமாக ஜொலிக்கும் புலித்தோலை உடையாக அணிந்தவனும் மின்னிக்கொண்டு தூய்மையான பால்போன்ற வெள்ளை நிறத்தில் ஜொலிக்கும் இளம் சந்திர பிறை வடிவ நிலாவை தன் சடைமுடியில் அணிந்தவனும் சுடுகாட்டில் எரித்தபின் மிஞ்சியிருக்கும் சூடான சாம்பலைப் பொடிபோல தனது திருமேனியெங்கும் பூசிக்கொண்டு அந்த பொடியின் மேலேயே திருநடனம் ஆடுகின்ற கூத்தனாகிய இறைவனின் மேல் யாம் செலுத்திய அன்பும் இறைவன் எம்மேல் கொண்ட அன்பும் இரண்டற பின்னிக் கலந்துள்ளது.
கருத்து: உண்மையான எதிர்பார்ப்பில்லாத பேரன்பை எதன் மீது செலுத்தினாலும் அதுவே சிவமாக இருக்கிறது என்பதை எவர் உணர்ந்து இருக்கின்றாரோ அவரோடு சிவனும் பேரன்பாகவே இரண்டறக் கலந்து இருக்கின்றான்.
மிக அருமை ..