பாடல் #203: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் துணையின் மீது ஆசைப்படாமல் இருத்தல்)
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
விளக்கம்:
உலகத்தில் இருக்கும் செல்வங்களே சிறப்பானவை என்று எண்ணி செல்வங்களை மேலும் மேலும் பெருக்க விரும்பி பல நாடுகளில் படை எடுத்துப் பெரும் செல்வம் சம்பாதித்த அரசனும் இருண்ட வானத்தில் எப்போதாவது தோன்றுகின்ற மின்னல் ஒளி போல அறியாமையாகிய இருளில் எப்போதாவது தோன்றும் சிற்றறிவு ஞானத்தையே பெரிதாக எண்ணிக்கொண்டு தமக்கு அனைத்தும் தெரியும் என்று காட்டிக் கொள்கின்றவனும் ஆண்களைக் கண்டால் பயந்து பார்க்கும் அழகிய பெண்களைக் கண்டு அவர்களின் அழகில் மயங்கி மோகம் கொண்டால் தங்களது அறிவு இருளாகிக் கொண்டு இருப்பதை அறிந்திருப்பவர் ஆகிய இந்த மூவலும் மோகத்தில் சிக்கிக்கொண்ட தங்களின் எண்ணங்களை மாற்ற முடியாமல் இருப்பார்கள் இவர்கள்.