பாடல் #198: முதல் தந்திரம் – 6. கொல்லாமை
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துமவர் தாமே.
விளக்கம்:
பிற உயிர்களை கொன்றுவிடு குத்திவிடு என்று கொலைவெறி பிடித்துக் கூறும் மிருகத்தன்மை கொண்டவர்களை வலிமையாக அடிக்கக்கூடிய எமனின் தூதுவர்கள் வந்து வலிமையான பாசக் கயிற்றால் கட்டி அடிக்கடி நில் செல் என்று மாறி மாறி அதட்டிக் கொண்டே இழுத்துச் சென்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் தீயில் கொண்டு சென்று இங்கேயே நில் என்று கொடிய வெப்பம் கொண்ட தீயினுள்ளேயே நிறுத்திவிடுவார்கள்.