பாடல் #1841: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியு
மாத்தியை நாளு மிறையை யறிகிலா
ராத்தி மலாகிட்டதற் கழுக்கற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சாததியும வைததுஞ சயமபுவென றெததியு
மாததியை நாளு மிறையை யறிகிலா
ராததி மலாகிடடதற கழுககறறக கால
மாததிககெ செலலும வழியது வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஆத்தியை நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மல் ஆக்கு இட்டு அதற்கு அழுக்கு அற்ற கால்
மா திக்கே செல்லும் வழி அது ஆமே.
பதப்பொருள்:
சாத்தியும் (நறுமணமிக்க மலர்களை அணிவித்தும்) வைத்தும் (அறுசுவை உணவு படைத்தும்) சயம்பு (தானாகவே தோன்றிய மூர்த்தி) என்று (என்று) ஏத்தியும் (போற்றி வணங்கியும்)
ஆத்தியை (அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகியவனை) நாளும் (தினம் தோறும் பூஜை செய்தும்) இறையை (இறைவனை) அறிகிலார் (யாரும் அறிந்து கொள்வது இல்லை)
ஆத்தி (உலக பற்றுக்களில் உள்ள ஆசையுடன்) மல் (மன உறுதியோடு போர் புரிந்து) ஆக்கு (அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி) இட்டு (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) அதற்கு (அந்த எண்ணங்களில்) அழுக்கு (எந்தவிதமான மாசும்) அற்ற (இல்லாமல் போகும்) கால் (காலத்தில்)
மா (சென்று அடைவதற்கு மிகப்பெரிய) திக்கே (திசையாகிய முக்திக்கு) செல்லும் (செல்லுகின்ற) வழி (வழியாக) அது (அதுவே) ஆமே (ஆகி விடும்).
விளக்கம்:
நறுமணமிக்க மலர்களை அணிவித்தும், அறுசுவை உணவு படைத்தும், தானாகவே தோன்றிய மூர்த்தி என்றுபோற்றி வணங்கியும், தினம் தோறும் பூஜை செய்தும் அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகிய இறைவனை யாரும் அறிந்து கொள்வது இல்லை. அதற்கு காரணம் உலகப் பற்றுக்களில் சிக்கி இறைவன் மேல் முழு பக்தி இல்லாமல் போவதே ஆகும். ஆகவே, உலக பற்றுக்களில் உள்ள ஆசைகளோடு மன உறுதியுடன் போர் புரிந்து அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி இறைவன் மேல் போகும் படி எண்ணங்களை வைத்து வந்தால் ஓரு காலத்தில் அந்த எண்ணங்களில் எந்தவிதமான மாசும் இல்லாமல் போகும். அப்போது சென்று அடைவதற்கு மிகப்பெரிய திசையாகிய முக்திக்கு செல்லுகின்ற வழியாக அதுவே ஆகி விடும்.
