பாடல் #1836: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் றானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யானடி சேர
வயனங்க ளாலென்றும் வந்துநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பயனறி வொனறுணடு பனமலர தூவிப
பயனறி வாரககரன றானெ பயிலும
நயனஙகள மூனறுடை யானடி செர
வயனஙக ளாலெனறும வநதுநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்கள் ஆல் என்றும் வந்து நின்றானே.
பதப்பொருள்:
பயன் (பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய) அறிவு (அறிவு) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது அதை பெறுவதற்கு) பன் (பலவிதமான) மலர் (நறுமணம் மிக்க மலர்களைத்) தூவி (தூவி அருச்சனை செய்து)
பயன் (அதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை) அறிவார்க்கு (அறிந்து கொள்கின்றவர்களுக்கு) அரன் (இறைவன்) தானே (தாமாகவே) பயிலும் (படிப்படியாக அனுபவங்களைக் கொடுத்து அருள்வான்)
நயனங்கள் (திருக் கண்கள்) மூன்று (மூன்று) உடையான் (உடைய இறைவனின்) அடி (திருவடியை) சேர (முழுவதுமாக சரணடைய)
வயனங்கள் (அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையின்) ஆல் (மூலமே) என்றும் (எப்போதும்) வந்து (இறைவன் அடியவருக்குள் வந்து) நின்றானே (நிற்பான்).
விளக்கம்:
பூஜை செய்து பெறுகின்ற பலன்களைப் பற்றிய அறிவு ஒன்று உண்டு. பல விதமான நறுமணம் மிக்க மலர்களை தூவி இறைவனுக்கு அருச்சனை செய்வதன் மூலம் பெறுகின்ற நற்பலன்களை அறிந்து கொள்கின்ற அடியவர்களுக்கு இறைவன் தாமாகவே படிப்படியாக பல அனுபவங்களை கொடுத்து அருள்வான். மூன்று கண்களைக் கொண்ட இறைவனின் திருவடியே கதியென்று முழுவதுமாக சரணடைந்த அடியவர்களுக்கு அவர்கள் எந்த வகையில் வழிபடுகின்றார்களோ அந்த வகையிலேயே இறைவன் வந்து நிற்பான்.
