பாடல் #1832: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
ஆனைந்து மாட்டி யமரர் குழாந்தொழத்
தானந்த மில்லாத் தலைவ னருளது
தேனுந்து மாமல ருள்ளே தெளிந்ததோர்
பாரைந்து குணமும் படைத்துநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆனைநது மாடடி யமரர குழாநதொழத
தானநத மிலலாத தலைவ னருளது
தெனுநது மாமல ருளளெ தெளிநததொர
பாரைநது குணமும படைததுநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் குழாம் தொழ
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தது ஓர்
பார் ஐந்து குணமும் படைத்து நின்றானே.
பதப்பொருள்:
ஆன் (அனைத்திற்கும் நாயகர்களாக விளங்குகின்ற) ஐந்தும் (மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவர்களுக்கும்) ஆட்டி (தீப ஆராதனை செய்து) அமரர் (அமரர்களின்) குழாம் (கூட்டம்) தொழ (தொழுது வணங்கும் போது)
தான் (தனக்கென்று) அந்தம் (எந்த ஒரு முடிவும்) இல்லா (இல்லாத) தலைவன் (தலைவனாகிய இறைவனின்) அருள் (திருவருள்) அது (அந்த ஐந்து நாயகர்களாக இருந்து அவர்கள் புரியும் தொழில்களை அருளுகின்றது)
தேன் (தெகிட்டாத தேனாகிய பேரின்ப அமிழ்தத்தை) உந்து (வெளியே அலைந்து தேடாமல் உண்மையான ஞானிகளால் தமக்குள்ளே தேடி அடைகின்ற) மா (மாபெரும்) மலர் (மலராகிய சகஸ்ரர தளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின்) உள்ளே (உள்ளே) தெளிந்தது (தெளிந்த ஜோதியாக வீற்றிருக்கின்ற) ஓர் (ஒரு பேரின்ப அமிழ்தமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது)
பார் (இந்த உலகத்தில் இருக்கின்ற) ஐந்து (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து விதமான பூதங்களின்) குணமும் (குணமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது) படைத்து (இப்படி அனைத்தையும் தமது திருவருளால் உருவாக்கி) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).
விளக்கம்:
அனைத்திற்கும் நாயகர்களாக விளங்குகின்ற மூர்த்திகளாகிய பிரம்மன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவர்களுக்கும் தீப ஆராதனை செய்து அமரர்களின் கூட்டம் தொழுது வணங்கும் போது அந்த ஐந்து நாயகர்களாக இருந்து அவர்கள் புரியும் தொழில்களை அருளுவது தனக்கென்று எந்த ஒரு முடிவும் இல்லாத தலைவனாகிய இறைவனின் திருவருளே ஆகும். தெகிட்டாத தேனாகிய பேரின்ப அமிழ்தத்தை வெளியே அலைந்து தேடாமல் உண்மை ஞானிகளால் தமக்குள்ளே தேடி அடைகின்ற மாபெரும் மலராகிய சகஸ்ரர தளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் உள்ளே தெளிந்த ஜோதியாக வீற்றிருக்கின்ற ஒரு பேரின்ப அமிழ்தமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது. இந்த உலகத்தில் இருக்கின்ற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து விதமான பூதங்களின் குணமாகவும் அந்த திருவருளே இருக்கின்றது. இப்படி தமது திருவருளாலே அனைத்தையும் உருவாக்கி நிற்கின்றான் இறைவன்.
![](https://i0.wp.com/kvnthirumoolar.com/wp-content/uploads/2025/02/1832.jpg?resize=564%2C752&ssl=1)