பாடல் #1831: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
ஆரா தனையு மமரர் குழாங்களுந
தீராக் கடலு நிலத்து மதாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான் றிருநாமமே
யாரா வழியெங்க ளாதிப் பிரானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆரா தனையு மமரர குழாஙகளுந
தீராக கடலு நிலதது மதாயநிறகும
பெரா யிரமும பிரான றிருநாமமெ
யாரா வழியெஙக ளாதிப பிரானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீரா கடலும் நிலத்தும் அது ஆய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திரு நாமமே
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே.
பதப்பொருள்:
ஆராதனையும் (அடியவர்கள் செய்கின்ற ஆராதனைகளாகவும்) அமரர் (வானுலகத்து அமரர்கள்) குழாங்களும் (கூட்டங்களாகவும்)
தீரா (எவ்வளவு எடுத்தாலும் தீராத அளவிற்கு நீரைக் கொண்ட) கடலும் (கடலாகவும்) நிலத்தும் (அந்த கடலால் சூழப்பட்ட நிலங்களாகவும்) அது (இவை அனைத்தும்) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்ற)
பேர் (தனக்கென்று தனிப்பெயர் இல்லாவிட்டாலும் அடியவர்களால் அன்போடு அழைக்கப் படுகின்ற) ஆயிரமும் (ஆயிரம் பெயர்களைக் கொண்ட) பிரான் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின்) திரு (திரு) நாமமே (நாமமே)
ஆரா (இறப்பு இல்லாத நிலைக்குச் செல்லுகின்ற) வழி (வழியாக) எங்கள் (எங்களின்) ஆதி (ஆதிமூல) பிரானே (தலைவனாகிய இறைவனே இருக்கின்றான்).
விளக்கம்:
அடியவர்கள் செய்கின்ற ஆராதனைகளாகவும், வானுலகத்து அமரர்களின் கூட்டமாகவும், எவ்வளவு எடுத்தாலும் தீராத அளவிற்கு நீரைக் கொண்ட கடல்களாகவும், அந்த கடல்களால் சூழப்பட்ட நிலங்களாகவும், அந்த நிலத்தில் வாழுகின்ற அடியவர்களால் அன்போடு அழைக்கப் படுகின்ற ஆயிரம் பெயர்களாகிய திருநாமங்களாகவும், அதை முறைப்படி சொல்லுகின்ற அடியவர்களை இறப்பு இல்லாத நிலைக்கு அழைத்துச் செல்லுகின்ற வழியாகவும், ஆதி மூல தலைவனாகிய இறைவனே இருக்கின்றான்.
![](https://i0.wp.com/kvnthirumoolar.com/wp-content/uploads/2025/02/1831.jpg?resize=564%2C752&ssl=1)