பாடல் #1830

பாடல் #1830: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

மறப்புறுத் திவ்வழி மண்ணில் நின்றாலுஞ்
சிறப்போடு பூநீர் திருந்த முன்னேந்தி
மறப்பின்றி யுன்னை வழிப்படும் வண்ண
மறப்பற வேண்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மறபபுறுத திவவழி மணணில நினறாலுஞ
சிறபபொடு பூநீர திருநத முனனெநதி
மறபபினறி யுனனை வழிபபடும வணண
மறபபற வெணடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மறப்பு உறுத்து இவ் வழி மண்ணில் நின்றாலும்
சிறப்போடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிப்படும் வண்ணம்
அறப்பு அற வேண்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

மறப்பு (மாயையினால் உன்னை மறக்கும்) உறுத்து (நிலையை அடைந்து) இவ் (இந்த) வழி (உலக வழிகளில் இன்பம் பெற வேண்டி) மண்ணில் (உலகத்தில்) நின்றாலும் (நின்று இருந்தாலும்)
சிறப்போடு (சிறப்பாக விளங்கும்) பூ (நறுமணமான மலர்களும்) நீர் (தூய்மையான நீரும்) திருந்த (உண்மையான அன்போடு யாம் மாற வேண்டும் என்று வேண்டி) முன் (உனக்கு முன்பு) ஏந்தி (கையில் ஏந்தி வந்து)
மறப்பு (இனி உன்னை மறந்து போகின்ற) இன்றி (நிலை இல்லாமல்) உன்னை (எப்போதும் உன்னை) வழிப்படும் (சீராக நினைத்து போற்றுவதற்கு) வண்ணம் (ஏற்ற படி)
அறப்பு (எந்த விதமான பாவமும்) அற (இல்லாமல்) வேண்டும் (உன் அருளைப் பெற வேண்டும் என்று யாம் வேண்டுகின்றோம்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவனே).

விளக்கம்:

அமரர்களின் தலைவனாகிய இறைவனே ஆசையினால் உன்னை பிரிந்து இந்த உலகத்தில் பிறந்து மாயையினால் உன்னை மறந்து உலக வழிகளில் கிடைக்கின்ற இன்பத்திலேயே நின்று கிடக்கின்றோம். உன் அருளால் இந்த நிலையிலிருந்து யாம் மாறி எந்த விதமான பாவமும் இல்லாமல் உன்னை சீராக நினைத்து போற்றுவதற்கு ஏற்றபடி அருளை பெற வேண்டும் என்று உண்மையான அன்போடு நறுமணமான மலர்களையும் தூய்மையான நீரையும் எமது கைகளில் ஏந்தி வந்து உனது முன் வேண்டுகின்றோம். எம்மீது கருணை கொண்டு அருள்வாயே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.