பாடல் #1829: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
அத்த னவதீர்த்த மாடும் பரிசுகே
ளொத்த மெஞ்ஞானத் துயர்ந்தவர் பாதத்தைச்
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே
முத்தி யாமென்று நம்மூலன் மொழிந்ததே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அதத னவதீரதத மாடும பரிசுகெ
ளொதத மெஞஞானத துயரநதவர பாதததைச
சுததம தாக விளககித தெளிககவெ
முததி யாமெனறு நமமூலன மொழிநததெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அத்தன் நவ தீர்த்தம் ஆடும் பரிசு கேள்
ஒத்த மெய் ஞானத்து உயர்ந்தவர் பாதத்தை
சுத்தம் அது ஆக விளக்கி தெளிக்கவே
முத்தி யாம் என்று நம் மூலன் மொழிந்ததே.
பதப்பொருள்:
அத்தன் (அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய இறைவன்) நவ (நமது உடலுக்குள் இருக்கின்ற ஒன்பது விதமான) தீர்த்தம் (தீர்த்தங்களாகிய சக்கரங்களில்) ஆடும் (திருநடனம் புரிவதினால்) பரிசு (கிடைக்கின்ற பலனை) கேள் (கேளுங்கள்)
ஒத்த (இறைவனுக்கு இணையாகிய) மெய் (உண்மையான) ஞானத்து (ஞானத்தில்) உயர்ந்தவர் (உயர்ந்து விளங்கும் ஞானிகளின்) பாதத்தை (அருள் நிறைந்த திருவடிகளை)
சுத்தம் (சுத்தமான) அது (நீரினால்) ஆக (சுத்தமாக) விளக்கி (கழுவித் துடைத்து) தெளிக்கவே (கழுவிய நீரை தம் தலையில் தீர்த்தமாக தெளித்துக் கொண்டால்)
முத்தி (மும்மலங்களும் நீங்கப்பெற்று கிடைக்கின்ற முக்தி நிலையாக) யாம் (யாமே இருப்போம்) என்று (என்று) நம் (நமக்கெல்லாம்) மூலன் (ஆதிமூலமாகிய இறைவன்) மொழிந்ததே (சொல்லி அருளினான்).
விளக்கம்:
அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகிய இறைவன் நமது உடலுக்குள் இருக்கின்ற ஒன்பது விதமான தீர்த்தங்களாகிய சக்கரங்களில் திருநடனம் புரிவதனால் கிடைக்கின்ற பலனை பற்றி கூறுகின்றேன் கேளுங்கள். இறைவனுக்கு இணையாகிய உண்மையான ஞானத்தில் உயர்ந்து விளங்கும் ஞானிகளின் அருள் நிறைந்த திருவடிகளை சுத்தமான நீரினால் கழுவித் துடைத்து அந்த நீரை நமது தலையில் தீர்த்தமாக தெளித்துக் கொண்டால் அந்த அருளின் பயனால் நமக்குள் இருக்கின்ற ஒன்பது விதமான தீர்த்தங்களாகிய சக்கரங்களில் இறைவன் வந்து திருநடனம் புரிவான். அப்போது அதன் பயனால் மும்மலங்களும் நீங்கப்பெற்று கிடைக்கின்ற முக்தி நிலையாக இறைவனே இருப்பான் என்று நமக்கெல்லாம் ஆதிமூலமாகிய இறைவனே சொல்லி அருளினான்.
உட் கருத்து:
புண்ணிய நதிகளில் நீராடுவதை விட இறைவனை உணர்ந்த ஞானிகளின் பாதங்களை கழுவிய நீரை தெளித்துக் கொள்வது எளிதில் இறையருளைப் பெறுவதற்கு வழிவகுக்கும். அது எப்படி என்றால் இறைவனை உணர்ந்த ஞானிகளின் அருள் நிறைந்த பாதங்களை தூய்மையான நீரினால் சுத்தமாக கழுவித் துடைத்தால் அந்த பாதத்தில் இருக்கின்ற அருளின் மூலம் நமக்குள் இருக்கின்ற மாயையாகிய அழுக்குகள் நீங்கி உண்மை அறிவைப் பெற்று அதன் மூலம் முக்தியை அடையலாம்.
உடலுக்குள் இருக்கின்ற ஒன்பது சக்கரங்கள்:
மூலாதாரம் (அக்னி மண்டலம்)
சுவாதிஷ்டானம்
மணிப்பூரகம்
அநாகதம்
விசுக்தி
ஆக்ஞை
சகஸ்ரதளம்
சூரிய மண்டலம் (துவாத சாந்த வெளி)
சந்திர மண்டலம்
![](https://i0.wp.com/kvnthirumoolar.com/wp-content/uploads/2025/02/1829.jpg?resize=564%2C752&ssl=1)