பாடல் #1828: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுள நீருள
வண்ணலது கண்டருள் புரியா நிற்கு
மெண்ணிலி பாவிக ளெம்மிறை யீசனை
நண்ணியறி யாமல் நழுவுகின் றாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
புணணியஞ செயவாரககுப பூவுள நீருள
வணணலது கணடருள புரியா நிறகு
மெணணிலி பாவிக ளெமமிறை யீசனை
நணணியறி யாமல நழுவுகின றாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
புண்ணியம் செய்வார்க்கு பூ உள நீர் உள
அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே.
பதப்பொருள்:
புண்ணியம் (இறைவன் விதித்த தர்மத்தை கடைபிடித்து பல புண்ணிய காரியங்களை) செய்வார்க்கு (செய்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனை வழிபடுவதற்கு தேவையான) பூ (பூவும்) உள (கிடைக்கும்) நீர் (நீரும்) உள (கிடைக்கும்)
அண்ணல் (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனை) அது (அனைத்து உயிர்களிலும்) கண்டு (கண்டு அறிந்து) அருள் (அந்த உயிர்களின் மேல் கருணை) புரியா (செய்யாமல்) நிற்கும் (நிற்கின்ற)
எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத அளவிற்கு பெரும்பாலான) பாவிகள் (பாவிகள்) எம் (எமது) இறை (இறைவனாகிய) ஈசனை (சிவபெருமானை)
நண்ணி (நெருங்கிச் சென்று) அறியாமல் (அறிந்து கொள்ளாமல்) நழுவுகின்றாரே (அறியாமையால் விலகிச் சென்றே அழிகின்றார்கள்).
விளக்கம்:
இறைவன் விதித்த தர்மத்தை கடைபிடித்து பல புண்ணிய காரியங்களை செய்கின்றவர்களுக்கு இறைவனை வழிபடும் போது அதற்கு தேவையான பூவும் நீரும் இறையருளால் எப்போதும் கிடைக்கும். ஆனால் எண்ணிக்கையில்லாத அளவு பெரும்பாலான மனிதர்கள் அனைத்து உயிர்களிலும் இறைவனை கண்டு அறிந்து கொண்டு அந்த உயிர்களின் மேல் கருணை செய்து அதன் மூலம் இறைவனை நெருங்கிச் சென்று அவனை முழுவதும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் அறியாமையால் இறைவனை விட்டு விலகிச் சென்ற பாவிகளாகவே வாழ்ந்து அழிகின்றார்கள்.