பாடல் #1826

பாடல் #1826: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

நினைவது வாய்மை மொழிவது மல்லாற்
கனைகழ லீசனைக் காண வரிதாங்
கனைகழ லீசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினைவது வாயமை மொழிவது மலலாற
கனைகழ லீசனைக காண வரிதாங
கனைகழ லீசனைக காணகுற வலலார
புனைமலர நீரகொணடு பொறற வலலாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனை கழல் ஈசனை காண அரிதாம்
கனை கழல் ஈசனை காண்கு உற வல்லார்
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே.

பதப்பொருள்:

நினைவதும் (நல்லதையே நினைப்பதும்) வாய்மை (உண்மையையே) மொழிவதும் (பேசுவதும்) அல்லால் (செய்யாமல் வேறு எந்த விதமான செயல்களாலும்)
கனை (இசைக்கின்ற அழகிய சிலம்புகளை) கழல் (அணிந்த திருவடிகளை உடைய) ஈசனை (இறைவனை) காண (தரிசிப்பது) அரிதாம் (அரியதான காரியம் ஆகும்)
கனை (இசைக்கின்ற அழிகிய சிலம்புகளை) கழல் (அணிந்த திருவடிகளை உடைய) ஈசனை (இறைவனை) காண்கு (அவ்வாறு செய்து தமக்குள் தரிசிக்கும்) உற (அருள் பெற்று) வல்லார் (தரிசிக்கக் கூடியவர்கள்)
புனை (நறுமணம் கொண்ட அழகிய) மலர் (மலர்களையும்) நீர் (தூய்மையான நீரையும்) கொண்டு (கொண்டு) போற்ற (தாம் தரிசித்த இறைவனை போற்றி வணங்கி பூஜிக்கும்) வல்லாரே (வல்லமை பெற்றவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

நல்லதை மட்டுமே நினைப்பது, உண்மையை மட்டுமே பேசுவது ஆகிய ஒழுக்கங்களை சரியாக கடை பிடிக்காமல் வேறு என்ன சாதகம் செய்தாலும் இசைக்கின்ற அழகிய சிலம்புகளை அணிந்த திருவடிகளை உடைய இறைவனை தரிசிக்க முடியாது. ஆகவே நன்மையை மட்டுமே நினைப்பதையும் உண்மையை மட்டுமே பேசுவதையும் ஒழுக்கமாகக் கொண்டு அதனோடு அனைத்து உயிர்களுக்குள்ளும் இசைகின்ற அழகிய சிலம்புகளை அணிந்த திருவடிகளை உடைய இறைவனை தரிசிக்கும் வல்லமை பெற்றவர்கள் தாம் தரிசித்த இறைவனை நேரிலேயே நறுமணம் கொண்ட அழகிய மலர்களாலும் தூய்மையான நீராலும் போற்றி வணங்கி வழிபடும் வல்லமை பெறுவார்கள்.

One thought on “பாடல் #1826

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.