பாடல் #1819

பாடல் #1819: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஒளியு மிருளு மொருக்காலுந் தீரா
வொளியுள் வோர்க்கன்றோ வொழியா தொளியு
மொளியிருள் கண்டகண் போலே வேறாயுள்
ளொளியிரு ணீங்கி யுயிர்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியு மிருளு மொருககாலுந தீரா
வொளியுள வொரககனறொ வொழியா தொளியு
மொளியிருள கணடகண பொலெ வெறாயுள
ளொளியிரு ணீஙகி யுயிரசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளியும் இருளும் ஒரு காலும் தீரா
ஒளி உள் ஓர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போலே வேறாய் உள்
ஒளி இருள் நீங்கி உயிர் சிவம் ஆமே.

பதப்பொருள்:

ஒளியும் (ஜோதியாகிய ஞானமும்) இருளும் (இருளாகிய மாயையும்) ஒரு (எந்தவொரு) காலும் (காலத்திலும்) தீரா (இல்லாமல் போகப் போவதில்லை)
ஒளி (உண்மையான ஞானமாகிய ஒளியை) உள் (தமக்குள்) ஓர்க்கு (ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு) அன்றோ (மட்டுமே) ஒழியாது (எப்போதும் நீங்காத) ஒளியும் (ஜோதியாக வீற்றிருக்கும்)
ஒளி (வெளிச்சத்தையும்) இருள் (இருட்டையும்) கண்ட (கண்டதே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற) கண் (புறக் கண்களைப்) போலே (போல) வேறாய் (இல்லாமல் உண்மை ஞானமாகிய இறைவனின் அம்சமாக) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற)
ஒளி (ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது) இருள் (இருளாகிய மாயை) நீங்கி (நீங்கி) உயிர் (உயிரானது) சிவம் (சிவமாகவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

ஜோதியாகிய ஞானமும் இருளாகிய மாயையும் எந்தவொரு காலத்திலும் இல்லாமல் போகப் போவதில்லை. உண்மையான ஞானமாகிய ஒளியை தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே எப்போதும் நீங்காத ஜோதியாக வீற்றிருக்கும். தாம் பார்க்கின்ற வெளிச்சத்தையும் இருட்டையும் மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற புறக் கண்களைப் போல இல்லாமல் உண்மை ஞானமாகிய இறைவனின் அம்சமாக உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது இருளாகிய மாயை நீங்கி உயிரானது சிவமாகவே ஆகி விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.