பாடல் #1815: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
யாரா வமுதளித் தானந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றில
னாரா வருட்கட லாடுகவென் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வாரா வழிதநத மாநநதி பெரநநதி
யாரா வமுதளித தானநதி பெரநநதி
பெரா யிரமுடைப பெமமான பெரொனறில
னாரா வருடகட லாடுகவென றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்று இலன்
ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.
பதப்பொருள்:
வாரா (இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத) வழி (பெரும் வழியை) தந்த (தந்து அருளிய) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அமுது (அமிழ்தமாகிய பேரின்பத்தை) அளித்தான் (அளித்து அருளியவன்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
பேர் (தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும்) ஆயிரம் (ஆயிரம் பெயர்களை) உடை (உடைய) பெம்மான் (பெருமானாக இருந்தாலும்) பேர் (தனக்கென்று தனிப் பெயர்) ஒன்று (ஒன்றும்) இலன் (இல்லாதவன்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அருள் (அமிழ்தமாகிய) கடல் (குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில்) ஆடுக (மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள்) என்றானே (என்று தமது அடியவர்களுக்கு அருளினான்).
விளக்கம்:
இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத பெரும் வழியை தந்து அருளிய மாபெரும் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை அளித்து அருளியவன் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும் ஆயிரம் பெயர்களை உடைய பெருமானாக இருந்தாலும் தனக்கென்று தனிப் பெயர் ஒன்றும் இல்லாதவன். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில் மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள் என்று தமது அடியவர்களுக்கு அருளினான்.
தத்துவ விளக்கம்:
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவி எடுக்காத மாபெரும் வழியை குருநாதனாக வந்த இறைவன் அடியவருக்கு தந்து அருளி அந்த வழியை சரியாகப் பின்பற்றுகின்ற மன வலிமையையும் கொடுத்து அதை அவர் அகங்காரம் வந்துவிடாமல் சரியாகப் பின்பற்றும் போது அதற்கு பலனாக என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை கொடுத்து அருளுகின்றான். இறைவன் கொடுக்கின்ற வழிமுறைகள் பல ஆயிரம் வகையாக இருக்கவே அடியவர்கள் அவன் புரிகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயரைக் கொடுத்து அவனை ஆயிரம் பெயர்களில் அழைத்தாலும் தனக்கென்று ஒரு பெயரும் இல்லாதவன் இறைவன். இப்படிப்பட்ட இறைவனே தனது பேரருளாகிய பெருங்கடலில் அடியவர்கள் மூழ்கித் திளைத்து இன்புற்றிருக்குமாறு அருளுகின்றான்.