பாடல் #1749: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
ஆங்கவை மூன்றினு மாரழல் வீசிடத்
தாங்கிடு மீரேழுந் தானடு வானதி
லோங்கிய வாதியு மந்தமு மாமென
வீங்கிவை தம்முட லிந்துவு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆஙகவை மூனறினு மாரழல வீசிடத
தாஙகிடு மீரெழுந தானடு வானதி
லொஙகிய வாதியு மநதமு மாமென
வீஙகிவை தமமுட லிநதுவு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈர் ஏழும் தான் நடு வான் அதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.
பதப்பொருள்:
ஆங்கு (அண்ட) அவை (சராசரங்களில்) மூன்றினும் (உள்ள அனைத்து உலகங்களாகவும் அதற்கு மேலாகவும் கீழாகவும் ஆகிய மூன்றிலும்) ஆர் (முழுவதுமாய் நிறைந்து இருக்கின்ற) அழல் (மாபெரும் தீயாக) வீசிட (வீசிக்கொண்டு இருக்க)
தாங்கிடும் (தாம் தாங்கிக் கொண்டு இருக்கின்ற) ஈர் (இரண்டும்) ஏழும் (ஏழும் பெருக்கி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களுக்கும்) தான் (தானே) நடு (நடுவனாக) வான் (ஆகாய தத்துவத்தில்) அதில் (அங்கே)
ஓங்கிய (ஓங்கி விளங்குகின்ற) ஆதியும் (அனைத்திற்கும் ஆதியும்) அந்தமும் (அனைத்திற்கும் முடிவும்) ஆம் (ஆக) என (இருப்பது தாமே எனவும்)
ஈங்கு (இங்கு) இவை (உள்ள அனைத்தையும்) தம் (தம்) உடல் (உடலுக்குள்ளே கொண்டு) இந்துவும் (சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும்) ஆமே (இருக்கின்றது).
விளக்கம்:
பாடல் #1748 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து நாத வடிவாக வெளிப்படுகின்ற நடராஜ வடிவ தத்துவமானது, அண்ட சராசரங்கள் அதற்கும் மேல் அதற்கும் கீழ் என்று மூன்று இடங்களிலும் முழுவதுமாக நிறைந்து நிற்கின்ற மாபெரும் தீயாகவும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்கிக் கொண்டும், அனைத்திற்கும் நடுவாகிய ஆகாய தத்துவமாகவும், அனைத்தையும் தாண்டி ஓங்கி விளங்குவதாகவும், அனைத்திற்கும் ஆதியாகவும், அனைத்திற்கும் முடிவாகவும், இப்படி இங்கு உள்ள அனைத்தையும் தம் உடலுக்குள்ளே கொண்டு சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும் இருக்கின்றது.