பாடல் #1748

பாடல் #1748: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உணர்ந்தே னுலகினி லொண் பொருளானைக்
குணர்ந்தேன் குவலையங் கோயிலென் னெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரநதெ னுலகினி லொண பொருளானைக
குணரநதென குவலையங கொயிலென னெஞசம
புணரநதென புனிதனும பொயயலல மெயயெ
பணிநதென பகலவன பாடடு மொலியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானை
கொணர்ந்தேன் குவலையம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

பதப்பொருள்:

உணர்ந்தேன் (எமக்குள்ளே உணர்ந்தேன்) உலகினில் (உலகமெங்கும் உள்ள) ஒண் (அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற) பொருளானை (மாபெரும் பொருளாகிய இறைவனை)
கொணர்ந்தேன் (கொண்டு வந்தேன்) குவலையம் (உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன்) கோயில் (வீற்றிருக்கின்ற கோயிலாகிய) என் (எமது) நெஞ்சம் (நெஞ்சத்துக்குள்ளே)
புணர்ந்தேன் (ஒன்றாக கலந்து விட்டேன்) புனிதனும் (எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனை) பொய் (இது பொய்) அல்ல (இல்லை) மெய்யே (உண்மையே ஆகும்)
பணிந்தேன் (பணிந்து தொழுதேன்) பகலவன் (அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை) பாட்டும் (அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும்) ஒலியே (ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்).

விளக்கம்:

உலகமெங்கும் உள்ள அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற மாபெரும் பொருளாகிய இறைவனை பாடல் #1747 இல் உள்ளபடி எமக்குள்ளே உணர்ந்தேன். உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கும் கோயிலாக எமது நெஞ்சத்துக்குள்ளே அவனை கொண்டு வந்தேன். அவ்வாறு எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனோடு ஒன்றாக கலந்து விட்டேன். இது பொய் இல்லை உண்மையே ஆகும். எமக்குள்ளிருந்தே அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை பணிந்து தொழுதேன். அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும் ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.