பாடல் #1747

பாடல் #1747: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றிய வாறு முடலினுடன் கிடந்
தென்று மெம்மீச னடக்கு மியல்வது
தென்ற லைத்தேறத் திருந்துஞ் சிவனடி
நின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறிய வாறு முடலினுடன கிடந
தெனறு மெமமீச னடககு மியலவது
தெனற லைததெறத திருநதுஞ சிவனடி
நினறு தொழுதெனென னெஞசததி னுளளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்றிய ஆறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் அடக்கும் இயல்பு அது
தென் தலை தேற திருந்தும் சிவன் அடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

பதப்பொருள்:

ஒன்றிய (இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற) ஆறும் (ஆறு சக்கரங்களும்) உடலின் (உடல்) உடன் (உடன்) கிடந்து (சேர்ந்து கிடந்து)
என்றும் (எப்போதும்) எம் (எம்பெருமான்) ஈசன் (இறைவன்) அடக்கும் (தமக்குள் அடங்கி இருக்கின்ற) இயல்பு (இயல்பான) அது (தன்மையாகிவிடும்)
தென் (அழகிய) தலை (தலையில் உடையவனாகிய இறைவனை) தேற (தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற) திருந்தும் (தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற) சிவன் (இறைவனின்) அடி (திருவடியை)
நின்று (நின்று) தொழுதேன் (வணங்கித் தொழுதேன்) என் (எமது) நெஞ்சத்தின் (நெஞ்சத்தின்) உள்ளே (உள்ளே).

விளக்கம்:

இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற ஆறு சக்கரங்களும் உடலோடு சேர்ந்து கிடந்து எப்போதும் எம்பெருமான் இறைவன் தமக்குள் அடங்கி இருக்கின்ற இயல்பான தன்மையாகிவிடும். அதன் பிறகு அழகிய தலையில் உடையவனாகிய இறைவனை தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற இறைவனின் திருவடியை நின்று வணங்கித் தொழுதேன் எமது நெஞ்சத்தின் உள்ளே.

குறிப்பு:

தென் தலையை அழகிய தலை என்று சொல்லப்படுவதன் காரணம் ஆறு சக்கரங்களும் ஒன்றாக சேர்ந்த பிறகு சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் விரிவடைந்து அதிலிருந்து வெளிப்படுகின்ற ஜோதி வடிவான இறை சக்தியானது கொன்றை மலரின் வாசனையை வெளிப்படுத்துவதால் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.