பாடல் #1746: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
மாநந்தி யெத்தனை கால மழைக்கினுந்
தானந்தி யஞ்சின் றனிச்சுடராய் நிற்குங்
கானந்தி யுந்திக் கடந்து கமலத்தின்
மேனந்தி யொன்பதின் மேவிநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மாநநதி யெததனை கால மழைககினுந
தானநதி யஞசின றனிசசுடராய நிறகுங
கானநதி யுநதிக கடநது கமலததின
மெனநதி யொனபதின மெவிநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்சின் தனி சுடர் ஆய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே.
பதப்பொருள்:
மா (மாபெரும்) நந்தி (குருநாதராகிய இறைவனை) எத்தனை (எத்தனை) காலம் (காலங்காலமாக) அழைக்கினும் (வேண்டி தொழுதாலும்)
தான் (தமக்குள்ளே இருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன்) அஞ்சின் (ஒளிமயமாகிய வடிவத்தில்) தனி (தனி) சுடர் (சுடர்) ஆய் (ஆகவே) நிற்கும் (நின்று வெளிப்படுவார்)
கால் (மூச்சுக்காற்றை) நந்தி (குருநாதர் காட்டிய வழியில்) உந்தி (வயிற்றைக்) கடந்து (கடந்து மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மூலாக்கினியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி கொண்டு சென்று) கமலத்தின் (ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் கொண்டு சேர்த்து)
மேல் (அதற்கு மேல் ஜோதியாக வீற்றிருக்கும்) நந்தி (குருநாதராகிய இறைவனுடன்) ஒன்பதின் (சகஸ்ரதளத்தை தாண்டி எட்டாவது துவாத சாந்த வெளியும் அதையும் தாண்டிய ஒன்பதாவது பர வெளியாகிய சந்திர மண்டம் வரை சென்று) மேவி (இந்த ஒன்பது சக்கரங்களிலும் முழுவதுமாக அவர் நிறைந்து) நின்றானே (நிற்பதுவே சதாசிவ இலிங்கமாகும்).
விளக்கம்:
மாபெரும் குருநாதராகிய இறைவனை எத்தனை காலங்காலமாக வேண்டி தொழுதாலும் தமக்குள்ளே இருக்கின்ற குருநாதராகிய இறைவன் ஒளிமயமாகிய வடிவத்தில் தனி சுடராகவே நின்று வெளிப்படுவார். மூச்சுக்காற்றை குருநாதர் காட்டிய வழியில் வயிற்றைக் கடந்து மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மூலாக்கினியை எழுப்பி, சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி கொண்டு சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் கொண்டு சேர்த்து, அதற்கு மேல் ஜோதியாக வீற்றிருக்கும் குருநாதராகிய இறைவனுடன் சகஸ்ரதளத்தை தாண்டி எட்டாவது துவாத சாந்த வெளியும், அதையும் தாண்டிய ஒன்பதாவது பர வெளியாகிய சந்திர மண்டலம் வரை சென்று, இந்த ஒன்பது சக்கரங்களிலும் முழுவதுமாக அவர் நிறைந்து நிற்பதுவே சதாசிவ இலிங்கமாகும்.