பாடல் #1745

பாடல் #1745: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடுஞ்
சத்தியறு கோணஞ் சயனத்தை யுற்றிடுஞ்
சத்திநால் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ்
சத்தியுரு வாஞ் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததிநாற கொணஞ சலமுறறு நினறிடுஞ
சததியறு கொணஞ சயனததை யுறறிடுஞ
சததிநால வடடஞ சலமுற றிருநதிடுஞ
சததியுரு வாஞ சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும்
சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நால் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உரு ஆம் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

சத்தி (சக்தி வடிவானது) நால் (நான்கு) கோணம் (கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில்) சலம் (தண்ணீர் போல) உற்று (தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும்) நின்றிடும் (ஞான சக்தியாக நின்றிடும்)
சத்தி (சக்தி வடிவானது) அறு (ஆறு) கோணம் (கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில்) சயனத்தை (சயன நிலையில் படுத்து கிடக்கும்) உற்றிடும் (இச்சா சக்தியாக வீற்றிருக்கும்)
சத்தி (சக்தி வடிவானது) நால் (நான்கு) வட்டம் (வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில்) சலம் (மேக நீரைப் போல சுழன்று கொண்டே இருக்கின்ற) உற்று (கிரியா சக்தியாக) இருந்திடும் (இருந்திடும்)
சத்தி (இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின்) உரு (இலிங்க வடிவங்கள்) ஆம் (ஆக இருப்பது) சதா (சதா) சிவம் (சிவமூர்த்தி) தானே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1744 இல் உள்ளபடி மூன்று சக்திகளின் வடிவானது இலிங்க வடிவத்தில் அமையும் போது நான்கு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் தண்ணீர் போல தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும் ஞான சக்தியாக நின்றிடும். ஆறு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் சயன நிலையில் படுத்து கிடக்கும் இச்சா சக்தியாக வீற்றிருக்கும். நான்கு வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் மேக நீரைப் போல சுழன்று கொண்டே இருக்கின்ற கிரியா சக்தியாக இருந்திடும். இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின் இலிங்க வடிவங்களாக இருப்பது சதா சிவமூர்த்தி ஆகும்.

கருத்து:

ஞான சக்தியானது அடியவரின் மனப் பக்குவத்துக்கு ஏற்றபடி இலிங்க வடிவத்தில் வெளிபட்டு அருளுவார். இச்சா சக்தியானது மனதின் ஆசைகளுக்கு ஏற்றபடி இலிங்க வடிவத்தில் வெளிபட்டு அருளுவார். கிரியா சக்தியானது மேகத்திலிருந்து மழையாகப் பொழிகின்ற நீர் மீண்டும் ஆவியாகி மேகத்தில் சென்று அடைவது போல அடியவரின் பிறவி சுழற்சியில் வினைகளின் படி அனுபவிக்கின்ற நன்மை தீமைகளை செயல் படுத்தி அருளுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.