பாடல் #1744: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
எண்ணி லிதைய மிறைஞான சத்தியாம்
விண்ணிற் பரசிர மிக்க சிகையாகி
வண்ணக் கவசம் வனப்புடை யிச்சையாம்
பண்ணுங் கிரிகை பரநேத்திரத் திலே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
எணணி லிதைய மிறைஞான சததியாம
விணணிற பரசிர மிகக சிகையாகி
வணணக கவசம வனபபுடை யிசசையாம
பணணுங கிரிகை பரநெததிரத திலெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
எண்ணில் இதையம் இறை ஞான சத்தி ஆம்
விண்ணில் பரம் சிரம் மிக்க சிகை ஆகி
வண்ண கவசம் வனப்பு உடை இச்சை ஆம்
பண்ணும் கிரிகை பர நேத்திரத்திலே.
பதப்பொருள்:
எண்ணில் (ஆராய்ந்து பார்த்தால்) இதையம் (இதயமானது) இறை (இறைவனின்) ஞான (ஞான) சத்தி (சக்தி) ஆம் (ஆகும்)
விண்ணில் (ஆகாயத்தில் இருக்கின்ற) பரம் (பரம்பொருளின் உறுப்புகளான) சிரம் (தலையும்) மிக்க (அதன் மேலுள்ள) சிகை (திருமுடியும்) ஆகி (ஆகி)
வண்ண (பல வண்ணமுள்ள) கவசம் (கவசம்) வனப்பு (செழுமையான) உடை (உடை) இச்சை (இச்சா சக்தி) ஆம் (ஆகும்)
பண்ணும் (செய்கின்ற) கிரிகை (அனைத்து தொழில்களும் கிரியா சக்தியாக) பர (பரம்பொருளின்) நேத்திரத்திலே (திருவருள் கண்ணால் செயல் படுவதாகும்).
விளக்கம்:
இறைவனின் மூன்று விதமான சக்திகளானது எப்படி இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் இதயமானது இறைவனின் ஞான சக்தியாக இருக்கின்றது. இறைவனின் தலையும் அதன் மேலுள்ள திருமுடியும் பல வண்ணங்களுள்ள கவசமும் செழுமையான உடையும் இச்சா சக்தியாக இருக்கின்றது. இறைவனின் திருவருள் கண்களே கிரியா சக்தியாக இருக்கின்றது.