பாடல் #1731

பாடல் #1731: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வேதா நெடுமா லுருத்திரன் மேலீசன்
மீதான வைமுகன் விந்துவு நாதமு
மாதார சத்தியு மாதிச் சிவனோடுஞ்
சாதாரண மாகுஞ் சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெதா நெடுமா லுருததிரன மெலீசன
மீதான வைமுகன விநதுவு நாதமு
மாதார சததியு மாதிச சிவனொடுஞ
சாதாரண மாகுஞ சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேதா நெடு மால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம் முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் ஆதி சிவனோடும்
சாதாரணம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

வேதா (பிரம்மா) நெடு (பூமிக்கும் ஆகாயத்திற்கும் விஸ்வரூபமாக நிற்கின்ற) மால் (திருமால்) உருத்திரன் (உருத்திரன்) மேல் (ஆகிய மூவர்க்கும் மேலான) ஈசன் (மகேஸ்வரன்)
மீது (அவருக்கும் மேல்) ஆன (ஆனவராகிய) ஐம் (ஐந்து) முகன் (முகங்களைக் கொண்ட சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும்) விந்துவும் (வெளிச்சமாகவும்) நாதமும் (சத்தமாகவும் இருக்கின்ற)
ஆதார (அனைத்திற்கும் ஆதாரமான) சத்தியும் (பராசக்தியும்) ஆதி (அனைத்திற்கு ஆதியாகிய) சிவனோடும் (பரமசிவனும்)
சாதாரணம் (ஆகிய அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானது) ஆகும் (ஆக இருப்பதே) சதா (அனைத்திற்கும் மேலானதாகிய) சிவம் (அன்பின் வடிவமாகிய சிவப் பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

வேதங்களை ஓதி படைக்கின்ற பிரம்மன், அனைத்தையும் காக்கின்ற திருமால், மாயையை அழிக்கின்ற உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும், அவர்களுக்கு மேல் இருக்கின்ற மாயையால் மறைக்கின்ற மகேஸ்வரன், அடியவருக்கு அருளுகின்ற சதாசிவன் ஆகியவரோடு சேர்த்து ஐந்து விதமான தொழில்களை செய்கின்ற தெய்வங்களும், அவர்களுக்கு மேல் வெளிச்சமாகவும் சத்தமாகவும் அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாகிய பராசக்தியும், ஆதியாகிய பரமசிவனும் ஆகிய இந்த அனைத்து தெய்வ நிலைகளுக்கும் பொதுவானதாகவும் அனைத்திற்கும் மேலானதாகவும் அன்பே வடிவமாகவும் இலிங்க அடையாளம் கொண்டும் இருப்பதே சதாசிவப் பரம்பொருள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.